டில்லி

லங்கையில் குண்டு வெடிப்பு நடத்திய தீவிரவாதிகள் காஷ்மீர் வந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என இந்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் ஒரு பெண் உள்ளிட்ட ஒன்பது தற்கொலைப்படை தீவிரவாதிகள் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்த்தினர்.    கொழும்பு நகரில் உள்ள 3 தேவாலயங்கள் மூன்று சொகுசு ஓட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.  சுமார் 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த குண்டு வெடிப்புக்கு ஐ எஸ் இஸ்லாமிய தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது.   இலங்கை அரசு இந்த தாக்குதல்கள் நியுஜிலாந்து நாட்டில் நடந்த மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக நிகழ்த்தப்பட்டதக தெரிவித்தது.   அத்துடன் இந்த தாக்குதல்களுக்கு இலங்கையில் உள்ள சில இஸ்லாமிய இயக்கங்கள் உதவி செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை ராணுவ தலைவர் மகேஷ் சேனநாயகே ஊடக பேட்டி ஒன்றில், “இந்த தற்கொலைப்படை தீவிரவாதிகளில் சிலர் பயிற்சிக்காக காஷ்மீர் சென்றுள்ளனர்.   அவர்களுக்கு அங்குள்ள தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருந்துள்ளது.  அத்துடன் அவர்கள் இந்தியாவில் உள்ள கேரளா, பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் சென்று வந்ததற்கான தகவல்கள் எங்களிடம் உள்ளது” என தெரிவித்தார்.

இது குறித்து மூத்த இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர், “நாங்கள் கடந்த வருடத்தில் இருந்து காஷ்மீருக்கு வந்த இலங்கை மக்களை பற்றி ஆராய்ந்தோம்.  அதில் யாரும் இந்த குண்டு வெடிப்புக்கு தொடர்புள்ளவர்கள் கிடையாது.   இலங்கையில் இருந்து ஒரு தீவிரவாத குழு காஷ்மீருக்கு வந்துள்ளது.    ஆனால் அந்த குழுவுக்கும் குண்டு வெடிப்புக்களுக்கும் தொடர்பு கிடையாது.

இது குறித்து இலங்கை மேலும் தக்வல்கள் கொடுத்தால் நாங்கள் மேலும் ஆராய்கிறோம்.   அதே நேரத்தில் அவர்கள் வேறு பெயர் மற்றும் போலி பாஸ்போர்ட் மூலமும்  வந்திருக்க வாய்ப்புக்கள் உண்டு.  எனவே இது குறித்து முழுமையான தகவல்கள் வந்த பிறகே நிச்சயமாக சொல்ல முடியும்” எனதெரிவித்துள்ளனர்.