டில்லி

இந்தியாவில் அமைய உள்ள புல்லட் ரெயில் குறித்த சான்றிதழ்களை அளிக்கும் பயிற்சிக்காக இந்திய அதிகாரிகள் விரைவில் ஜப்பான் செல்ல உள்ளனர்.

பிரதமரின் கனவுத் திட்டம் எனக் கூறப்படும் புல்லட் ரெயில் திட்டம் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர்  மோடி மற்றும்ஜபானிய பிரதமர் ஷின்சோ அபே ஆகியோரால் தொடங்கப்பட்டது. இந்தப் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. வரும் 2022 ஆம் ஆண்டு சுதந்திர தினத்துடன் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. அன்று மும்பை மற்றும் அகமதாபாத் இடையிலான இந்த புல்லட் ரெயில் தொடக்க விழா நடைபெற வேண்டும் என அரசு திட்டமிட்டுள்ளது.

ரெயில்கள் செல்ல தண்டவாளங்கள் அமைக்கப்படும்  போது ரெயில்வே அதிகாரிகள் அவற்றைச் சோதிப்பது வழக்கம். அந்த தண்டவாளங்களில் சோதனை ஓட்டம் உள்ளிட்ட பல ஆய்வுக்குப் பிறகு அதிகாரிகள் இதற்கான சான்றிதழ்களை வழங்குவார்கள். இவ்வாறு சான்றிதழ் பெற்றால் மட்டுமே அந்த தடத்தில் ரெயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பது ரெயில்வே பாதுகாப்பு விதிகளில் ஒன்றாகும். அனைத்து ரெயில்கலுக்கான பாதைகளும் இவ்வாறு சோதிக்கப்படுகின்றன.

ஆனால் இந்தியாவில் முதல் முதலாக புல்லட் ரெயில் இயக்கப்பட உள்ளது. இது நம் நாட்டில் ஓடும் மிகுந்த வேகமுள்ள ரெயிலை விட அதி வேகமான ரெயில் ஆகும். இதுவரை நம் நாட்டு அதிகாரிகள் இத்தகைய வேகம்  உள்ள ரெயில் தடங்களைச் சோதித்ததோ அதற்குச் சான்றிதழ் வழங்கியதோ கிடையாது. இந்த ரெயில் திட்டம் ஜப்பான் நாட்டு உதவியுடன் நடைபெறுகிறது. அதனால் இது குறித்த விவரங்களை அறியவும் பயிற்சிகள் பெறவும் இந்திய அதிகாரிகள் விரைவில் ஜப்பான் செல்ல உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.