டில்லி

ந்திய எண்ணெய் வர்த்தகர் சங்கம் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானை ஆதரிக்கும் மலேசிய நாட்டு பாமாயிலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.

இந்தியாவின் சமையல் என்ணெயில் அதிக அளவில் இறக்குமதி ஆவது பாமாயில் ஆகும்.   மலேசிய நாட்டில் இருந்து பாமாயில் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது.   பாமாயில் மற்றும் அது சார்ந்த  பொருட்கள் கடந்த ஆண்டு மலேசியாவில் இருந்து 163 லட்சம் கோடிக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.  மலேசியாவின் எண்ணெய் வர்த்தக நாடுகளில் இந்தியா முதலிடம் வகித்து வந்தது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி அன்று விதி எண் 370 விலக்கப்பட்டு காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்தது.   மேலும் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.    இதையொட்டி கலவரங்களைத் தடுக்க மாநிலத்தில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.   இதனால் காஷ்மீர் பகுதியில் மனித உரிமை மீறப்படுவதாகப்  பாகிஸ்தான் உலக நாடுகளிடம் புகார் அளித்தது.

ஐநா பொதுக் குழுவில் பேசிய மலேசியப் பிரதமர் மகாதிர் முகமது, “இந்தியா காஷ்மீர் மீது படையெடுத்து ஆக்கிரமித்துள்ளதாகப் பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்து தெரிவித்தார்.   இது இந்தியாவில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.   ஏற்கனவே துருக்கி நாடு பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததை அடுத்து அந்நாட்டுடன்  போர்க்கப்பல்கள் கட்ட செய்யப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

அவ்வகையில் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலைக் குறைக்க அரசு திட்டமிட்டது.    மலேசியாவுக்கு பதிலாக இந்தோனேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்பட உள்ளது.   அரசின் இந்த முடிவுக்கு இந்திய எண்ணெய் வர்த்தகர்கள் சங்கம் ஆதரவு அளித்துள்ளது.

நேற்று இந்த சங்கம் வெளியிட்ட அறிவிப்பில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்படும் மலேசிய அரசை எதிர்ப்பதாகவும் அதனால் இனி மலேசியாவில் இருந்து பாமாயில் வாங்கப் போவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   அத்துடன் இவ்விவகாரத்தில் இந்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்து உறுப்பினர்கள் அனைவரும் மலேசியாவில் இருந்து பாமாயில் வாங்குவதை முழுவதுமாக நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.