மும்பை: சவூதியில் அராம்கோ எண்ணெய் உற்பத்தி மையத்தின் மீது டிரோன் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதையடுத்து, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், தங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மதிப்பாய்வு செய்து வருகின்றன.

அரகோமா மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலையடுத்து, உலகெங்கிலும் கச்சா எண்ணெய் சப்ளை செயல்பாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா உலகளவில் முக்கியமான எண்ணெய் சுத்திகரிப்பு மையமாக திகழ்கிறது. கடந்த 1998ம் ஆண்டு ஆண்டிற்கு 62 மில்லியன் டன்கள் எண்ணெய் சுத்திகரிப்பு நடைபெற்ற நிலையில், தற்போது ஒரு ஆண்டிற்கு 249.366 மில்லியன் டன்கள் என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது.

இந்திய சுத்திகரிப்பு ஆலைகளில் கணிசமான அளவிற்கு எண்ணெய் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் என்பதால் இந்த பாதுகாப்பு மதிப்பீடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

கடந்த 2009ம் ஆண்டு முதலே சுத்திகரிப்பு செய்யப்பட்ட எண்ணெய் பொருட்களை ஆசியாவிலேயே அதிகளவு ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா திகழ்கிறது. பெட்ரோலியம் பொருட்களை அதிகம் ஏற்றுமதி செய்யும் அதேவேளையில், இந்த 2018-19 நிதியாண்டில் 207.3 மில்லியன் டன்கள் இறக்குமதியும் செய்துள்ளது.