சிங்கப்பூர்: டிரம்ப்புடன் செல்பி எடுக்க ரூ.38,000 செலவு செய்த இந்தியர்

சிங்கப்பூர்:

மலேசியாவில் வாழும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் மகாராஜ் மோகன்( வயது 25). அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தீவிர அனுதாபி.

சிங்கப்பூரில் டிரம்பும், வட கொரியா அதிபர் கிம் ஜாங்கும் இன்று சந்தித்துக் கொண்ட நிகழ்ச்சி நடந்தது. இந்த சந்திப்பின் போது எப்படியாவது டிரம்புடன் செல்பி எடுத்துவிட வேண்டும் என்ற ஆவலில் சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவின் ஷாங்ரி-லா ஓட்டலில் ரூ.38 ஆயிரம் செலவழித்து அறை எடுத்து தங்கினார்.

சந்திப்பிற்கு டிரம்ப் புறப்பட்ட சென்ற போது செல்பி எடுக்க ஓட்டல் வரவேற்பு அறையில் 5 மணி நேரம் காத்திருந்தார். ஆனால் டிரம்ப் பயன்படுத்தும் பீஸ்ட் என்ற கார் அருகே மட்டுமே நின்று அவரால் செல்பி எடுக்க முடிந்தது.

இது குறித்து மகாராஜ் மோகன் கூறுகையில்,‘‘அனைவரும் டிரம்ப் உடன் செல்பி எடுப்பது சாத்தியம் இல்லாத காரியம் என்று கூறினர். ஆனால், சில நேரம் எதிர்பாராத சம்பவங்கள் நடக்கும் என்ற எண்ணத்தில் இந்த முயற்சியில் இறங்கினேன்’’ என்றார்.