நாசா விண்வெளி பயணத்துக்கு இந்திய வம்சாவளி அமெரிக்கர் தேர்வு

வாஷிங்டன்:

நாசாவின் அடுத்த விண்வெளி பயணத்துக்கு 7 ஆண்கள், 5 பெண்கள் என 12 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இந்திய அமெரிக்கர் ராஜா சாரியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு நாசா சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் விண்வெளிக்குச் சென்றுள்ளனர். அந்த வரிசையில் 3-வது இந்தியராக ராஜா சாரி இணைகிறார்.

தற்போது கலிபோர்னியாவில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தில் 461-வது பிளைட் டெஸ்ட் ஸ்குவாட்ரனின் கமாண்டராக இவர் பணியாற்றி வருகிறார். ராஜா சாரி உட்பட புதிதாக தேர்வு செய்யப்பட்ட 12 விண்வெளி வீரர்களுக்கும் ஹுஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தில் 2 ஆண்டுகள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சி வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது.

ராஜா சாரியின் தந்தை ஸ்ரீநிவாஸ் சாரி. இவர் ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பொறியியல் முடித்துவிட்டு அமெரிக்காவில் குடியேறியவர்.