துபாய்: விமான போக்குவரத்து தடை காரணமாக, கேரளாவில் மகனின் இறுதிச் சடங்கை, துபாயில் இருந்தே பெற்றோர் ஆன்லைனில் பார்த்து கதறி அழுதது, நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம், சார்ஜா நகரில் இருக்கும் கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 3 மகன்கள்.  மூத்த மகன் ஜுவல் ஜி ஜொமெ. அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர். 7 ஆண்டுகளாக புற்று நோய் பாதிப்பு இருந்தது.

அதற்காக சிகிச்சையும் பெற்று வர ஒரு கட்டத்தில் உடல் நலம் மோசம் அடைந்து தனியார் மருத்துவமனையில் கடந்த 11ம் தேதி அன்று ஜூவல் உயிரிழந்தார். பிறந்த நாளுக்கு ஒரு நாள் முன்பு அவர் இறக்க சோகம் சூழ்ந்தது.

மனம் உடைந்த அவரது  பெற்றோர், சடலத்தை கேரளாவில் உள்ள சொந்த ஊரான பத்தனம்திட்டாவில் அடக்கம் செய்ய ஆசைப்பட்டனர். அரசு அதிகாரிகளின் உதவியோடு இவரது உடலை சரக்கு விமானத்தின் மூலம் இந்தியா கொண்டு செல்ல அனுமதி கிடைத்தது.

ஆனால் சோகத்திலும் சோகம் சிறுவனின் சடங்குக்காக கொரோனா ஊரடங்கால் பெற்றோர் இந்தியா வர அனுமதி கிடைக்க வில்லை. அதனால் சிறுவனது உடல் மட்டும் இந்தியா எடுத்து செல்லப்பட்டு சொந்த ஊரில் இறுதி சடங்கு நடைபெற்றது.

அதனை சார்ஜாவிலிருந்து அவரது குடும்பத்தினர் ஆன்லைன் மூலம் பார்த்து கதறி அழுதனர். யூடியுபில் இந்த நேரடி ஒளிபரப்பை ஆயிரக்கணக்கானோர் பார்த்து கண்ணீரில் நனைந்தனர். கொரானா வைரஸ், பலரின் வாழ்வியலை ஒட்டுமொத்தமாக தலைகீழாக மாற்றி விட்டது எனலாம்.