டெல்லி: நேபாளம், பூடான், மொரிசியஸ் உள்ளிட்ட 16 நாடுகளுக்கு விசா இன்றி இந்தியர்கள் பயணிக்கலாம் என்று மத்திய அரசு கூறி உள்ளது.

இந்தியர்களுக்கு வெளிநாடுகளில் வழங்கப்படும் விசா விவரங்கள் பற்றி ராஜ்யசபாவில் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன் பதில் அளித்துள்ளார்.

அவர் தமது பதிலில் கூறி இருப்பதாவது: சாதாரண பாஸ்போர்ட் வைத்துள்ள இந்திய மக்கள் பார்படாஸ், பூடான், ஹைதி, ஹாங்காங், மாலத்தீவுகள், மொரீஷியஸ், நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.

இந்திய பயணிகளுக்கு ஈரான், இந்தோனேஷியா, மியன்மர் உள்ளிட்ட 43 நாடுகள் விசா வசதியை வழங்குகிறது. இலங்கை, நியூசிலாந்து , மலேசியா உள்ளிட்ட 36 நாடுகளில் இந்தியர்களுக்கு இ விசா வசதியும் இருக்கிறது.

விசா இல்லாத பயணம், விசா வருகை மற்றும் இ விசா வசதிகளை வழங்கும் நாடுகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது என்றும் அவர் தமது பதிலில் கூறி உள்ளார்.