டில்லி

இந்திய மக்களுக்கு இந்த வருடப் புத்தாண்டு பரிசாக கொரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளதாக மருந்து கட்டுப்பாடு இயக்குநரகம் தெரிவித்துள்ளது,

சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.  இதுவரை 1.02 கோடி பேர் பாதிக்கப்பட்டு அதில் 1.48 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 98.60 லட்சம் பேர் குணமடைந்து தற்போது 2.6 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். எனவே மக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் தேவை மிகவும் அவசியமான நிலை உள்ளது.

தற்போது இந்தியாவில் 6 கொரோனா தடுப்பூசிகள் சோதனி முடிவில் உள்ளன.  இவற்றில் சீரம் இன்ஸ்டிடியூட், பாரத் பயோடெக் மற்றும் பிஃபிஸர் நிறுவன தடுப்பூசிகள் ஒப்புதலுக்குக் காத்திருக்கின்றன.   இது குறித்து நிபுணர்கள் குழு ஆலோசனை நடத்தித் தங்கள் அறிக்கைகளை இந்திய மருந்து கட்டுப்பாடு இயக்குநரகத்துக்கு அளித்து வருகின்றன.  கடந்த புதன் கிழமை இந்தக் குழு பாரத் பயோடெக் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் தடுப்பூசிகளைக் குறித்து ஆய்வு நடத்தி உள்ளன.

இதைப் போல் டாக்டர் ரெட்டி லாபரடரியில் ரஷ்யாவின் கோவாக்சின் என்னும் கொரோனா தடுப்பூசி சோதனை இறுதிக்கட்டத்தில்  உள்ளது.  இன்று இந்திய மருந்து கட்டுப்பாடு இயக்குநரக தலைவர் சோமானி ஒரு காணொளி கருத்தரங்கில் கந்துக் கொண்டார்.  இந்த கருத்தரங்கை நுண்ணுயிர் தொழில்நுட்ப துறை ஏற்பாடு செய்திருந்தது.  இதில் சோமானி சிறப்புரை ஆற்றி உள்ளார்.

அவர் தனது உரையில். “நுண்ணுயிர் தொழில்நுட்பத்துறை கொரோனா தடுப்பூசி கண்டறிய நிதி உதவி உள்ளிட்ட பல உதவிகள் செய்துள்ளன. இந்த உதவிகள் நிச்சயம் மக்களுக்குப் பலன் அளிக்கும். அநேகமாக இந்திய மக்களுக்கு இந்த வருடப் புத்தாண்டு பரிசாக கொரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளது.  இப்போதைக்கு என்னால்; அவ்வளவு தான் கூற முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.