மாலத்தீவு அதிபர் பதவி ஏற்பு விழாவில் மோடி பங்கேற்பு

மாலே:

மாலத்தீவு புதிய அதிபர் பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடப்பட்டுள்ள நிலையில், பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

1,192 குட்டித் தீவுகளை கொண்ட மாலத்தீவில் அதிபராக முகமது யாமீன் இருந்து வந்தார். அவர்மீது ஊழல் முறைகேடு புகார் எழுந்ததால், சில மாதங்களாக  அரசியல் குழப்பம் நீடித்து வந்தது. இந்த பரபரப்பான சூழலில் கடந்த செப்டம்பர் மாதம் 23ந்தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் அதிபர் அப்துல்லா யாமீனுக்கும், எதிர்க்கட்சி களின் சார்பில் நிறுத்தப்பட்டு இருந்த இப்ராகிம் முகம்மது சோலிக்கும் நேரடி போட்டி நிலவியது.

இந்த நிலையில், மொத்த வாக்காளர்களில் 58.3 சதவீத வாக்குகள் பெற்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத் தில் இப்ராகிம் முகமது சோலி வெற்றி பெற்றார். இதை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

வெற்றிபெற்ற இப்ராகிம் முகம்மது சோலிக்கு இந்தியா சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் புதிய அதிபராக இப்ராகீம் முகம்மது சோலி நவம்பர் மாதம் 17ம் தேதி பதவி ஏற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்திய பிரதமர் மோடியை பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.

மாலத்தீவு அதிபரின் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் மோடி பதவி ஏற்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாலத்தீவு செல்கிறார்.  இதன் காரணமாக  இரு நாடுகளும் உறவு மேலும் வலுப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.