டில்லி

கொரோனா அச்சம் காரணமாக நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நேரத்தில் இந்திய  ரயில்வே பல ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கி உள்ளது.

கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25 முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.  அப்போது ரயில்வே சேவைகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டன.   அதன்பிறகு ஒவ்வொரு முறை தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆயினும் ரயில் சேவைகள் முழு அளவில் இன்னும் தொடங்கவில்லை.  சிறப்பு ரயில்கள் மட்டுமே இயங்கி வருகின்றன.

இந்த ஊரடங்கைப் பயன்படுத்தி இந்திய ரயில்வே கடிதங்கள், பில்கள், அலுவலக உத்தரவுகள், திட்ட வரைபடங்கள்,உளிட்டவைகளை டிஜிட்டல் மயமாக்கி உள்ளது.  கடந்த 4 மாதங்களில் இவ்வாறு 12 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆவணங்கள் கணினியில் ஏற்றபடுள்ளன.   இதன் மூலம் அலுவலக செயல்பாட்டுச் செலவு மிகவும் குறையும் என எதிர்பார்ப்பு உள்ளது.

ரயில்வே இணையமான ரயில்டெல் இந்த பணிகளுக்காக ஒரு மின் அலுவலக தளம் ஒன்றை அமைத்துள்ளது. இந்த தளமொரு கிளவுட் மென்பொருளாகும்.   இதில் அலுவலக கோப்புக்கள் அனைத்தையும் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் கையாள வழிவகைகள் செய்யபட்டுள்ளன.  இந்த இ ஆபிஸ்  அதாவது மின் அலுவலக தளம் மூலம் உடல் தொடர்பு இன்றி அனைத்து பணிகளும் செய்ய முடியும் என்பதால் கொரோனா பரவி வரும் இந்நேரத்தில் இது மிகவும் பயனளிப்பதாகக் கூறப்படுகிறது.