1326 கிமீ தூரத்தை 4 வருடங்களில் கடந்த இந்தியன் ரெயில்வே சரக்கு ரெயில்

ஸ்தி,  உத்திரப் பிர்தேசம்

ந்திய ரெயில்வே சரக்கு ரெயில் பெட்டி ஒன்று 4 ஆண்டுகள் கழித்து உரிய இடத்துக்கு சென்றுள்ளது.

இந்திய ரெயில்வே  சரக்கு ரெயில்கள் மூலமே தனது வருமானத்தை பெற்று வருவதாக கூறிக் கொள்கிறது.   அதனால் சரக்கு ரெயில்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் குறித்த நேரத்தில் சரக்குகள் வாடிக்கையாளர்களை சென்றடைவதாகவும் விளம்பரங்களில் இந்திய ரெயில்வே தெரிவித்து வருகிறது.    ஆனால் அதற்கு நேர்மாறாக ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த 2014ஆம் வருடம், நவம்பர் மாதம் 10 ஆம் தேதி அன்று  விசாகப்பட்டினத்தில் இருந்து இந்தியன் பொடாஷ் லிமிடெட் என்னும் உரம் தயாரிக்கும் நிறுவனம் ஒரு சரக்கு பெட்டியை முழுவதுமாக வாடகைக்கு எடுத்தது.   அந்த பெட்டியில்  டை அமோனியம் பாஸ்பேட் என்னும் 1316  உர மூட்டைகள் அனுப்பப்பட்டன.

விசாகப்பட்டினத்தில் இருந்து  1326 கிமீ தூரத்தில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பஸ்தி என்னும் ஊருக்கு அது அனுப்பப்பட்டது.   அங்குள்ள உர வியாபாரியான ராமசந்திர குப்தா என்பவரின் பெயரில் அனுப்பப்பட்ட இந்த உரமூட்டைகள் அடங்கிய பெட்டி அவரை வந்து சேரவில்லை.    உரமூட்டைகள் வந்து சேர்ந்தால் மட்டுமே பணம் அளிக்க வேண்டும் என்பதால் அவர் இது குறித்து புகார் அளிக்கவில்லை.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று பஸ்தி நகருக்கு வந்த ஒரு சரக்கு ரெயிலில் இந்த பெட்டியும் இணைக்கப்பட்டிருந்தது.  இந்த பெட்டியையும் அதன் ஆவணங்களையும் கண்ட ரெயில்வே அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.   சுமார் 42 மணி நேரத்தில் வர வேண்டிய இந்த பெட்டி கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் கழிந்து உரிய இடத்துக்கு ஒரு சரக்கு ரெயில் பெட்டி வந்தது அனைவருக்கும் வியப்பை உண்டாக்கியது.

இது குறித்து வடகிழக்கு ரெயில்வே அதிகாரி சஞ்சய் யாதவ், “ஒரு சில வேளைகளில் சரக்கு ஏற்றிய ரெயில் பெட்டிகள் பழுதாகி விடும்.  அதை பழுது பார்க்க அனுப்பப் படுவது வழக்கம்.   அவ்வாறு அனுப்பப்பட்ட இந்தப் பெட்டியின் உள்ளே மூட்டைகள் உள்ளதை கவனக்குறைவாக விட்டுள்ளனர்.  அதன் பிறகு விவரம் அறிந்து அனுப்பி வைத்துள்ளனர்.” எனக் கூறி உள்ளார்.