நூதன வழியில் உயர்த்தப்படும் ரயில் கட்டணம்…

சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளிடம் சுங்க கட்டணம் என்ற பெயரில் கொள்ளை நடப்பது போல், ரயில் பயணிகளிடமும், ரயில் கட்டணத்தோடு சேர்த்து ‘சுங்க’ கட்டணம் ‘’ வசூலிக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

இந்த ’சுங்க’ கட்டணத்துக்கு, ரயில் நிலைய ‘’பயன்பாடு கட்டணம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஒரு ஆறுதலான செய்தி என்ன வென்றால், இந்த ‘பயன்பாடு கட்டணம்’ அனைத்து ரயில் நிலையங்களிலும் வசூலிக்கப்பட மாட்டாது. இந்தியாவில் தற்போது 7 ஆயிரம் ரயில் நிலையங்கள் உள்ளன. முதல் கட்டமாக சுமார் ஆயிரம் ரயில் நிலையங்களில் ‘பயன்பாடு கட்டணம்’ வசூலிக்கப்படும்.

இந்த குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் ஏறி, இறங்குவோருக்கான ரயில் கட்டணம் மட்டும் ’’கொஞ்சம்’’ அதிகமாக இருக்கும். டெல்லியில் நேற்று காணொலி காட்சி மூலம் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ், இந்த தகவல்களை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவித்த கருத்துகள் இவை: ‘’ இந்த பயன்பாடு கட்டணம், ரயில்வே நிலையங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தச் செலவிடப்படும். இந்த கட்டணம், ரயில் பயணிகள், ’’தாங்கி’’ கொள்ளும் வகையில் இருக்குமே தவிர அவர்களுக்கு ‘வலி’ ஏற்படுத்துவதாக இருக்காது’’