டில்லி

ற்போது அமலில் உள்ள ஊரடங்கு காலத்தை இந்திய ரயில்வே பராமரிப்பு பணிகளுக்காகப் பயன்படுத்தி வருகிறது.

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் மார்ச் 25 முதல் ஊரடங்கு அமலில் உள்ளது.  இதுவரை இரண்டு முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.   வரும் 17 ஆம் தேதி வரை தொடர உள்ள இந்த ஊரடங்கில் தரை, விமானம், ரயில் உள்ளிட்ட அனைத்துப் பயணப் போக்குவரத்துக்களும் தடை செய்யப்பட்டுள்ளன.

ஒரு சில மாநிலங்களில் தரை வழியாகத் தனியார் வாகனங்களும் புலம் பெயர் தொழிலாளர்களுக்காக தற்போது சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.

தற்போது நிலவி வரும் இந்த ஊரடங்கைப் பராமரிப்பு பணிகளுக்காக இந்திய ரயில்வே பயன்படுத்தி வருகிறது.   நாடெங்கும் ரயில்கள் அடியோடு நிறுத்தப்பட்டதால் தண்டவாளங்கள், வழித் தடங்கள், சிக்னல் உள்ளிட்டவற்றைச் சீர் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.  இதற்காக 500 நவீன கனரக இயந்திரங்கள் மற்றும் பராமரிப்பு ஊழியர் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை12,270 கிமீ தொலைவிலான பாதைகள் சீர் செய்யப்பட்டுள்ளன.  இதைத் தவிர 30,182 கிமீ தூரப் பாதையில் அல்டிராசோனிக் மூலம் குறைபாடுகள் கண்டறிந்து 1,34,443 ரயில் தட வெல்டிங் மூலம் சீரமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன.  இந்தப் பணிகள் அனைத்தையும் ஊரடங்கு நேரத்தில் முடித்து ஊரடங்குக்குப் பிறகு பராமரிப்புக்காக ரயில் சேவையை நிறுத்தாமல் இருக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.