டில்லி:

ந்திய ரயில்வேயை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் மோடி அரசு, தற்போது 55 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதை எட்டியுள்ள சுமார் 3 லட்சம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்திருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இது ரயில்வே ஊழியர்களிடையே அச்சத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

ரயில்வேதுறை தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதாக திமுக, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு, பதில் அளித்து பேசிய மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், ரயில்வே துறை தனியார் மயம் ஆக்கப்படும் என்ற கேள்விக்கே இடமில்லை என்றும், ரயில்வே துறையில் வசதிகளை மேம்படுத்துவதற்காக மட்டுமே தனியாரின் பங்களிப்பு கோரப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். தேசிய நலன் கருதி தனியார் பங்களிப்பு கோரப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தார்.

ஆனால், தற்போது 3 லட்சம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.  ஊழியர்களின் சம்பளம் மற்றும் சலுகைகளுக்காக பெருமளவு பணம் செலவாவதால், அதை குறைக்கும் வகையில், இந்திய ரயில்வே 3 லட்சம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி,  55+ வயதுடைய ரயில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பட்டியல் தயாரிக்க ரயில்வே அமைச்சகம் அனைத்து மண்டல அலவலகங்க ளுக்கும் கடிதம் எழுதி உள்ளதாகவும், அதில் ரயில்வே ஊழியர்களின் செயல்திறன் மற்றும் அவர்களது நடவடிக்கைகள் உள்பட  பிற அளவீடுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த பட்டியல் தயாரிக்கும் பணி ஜரூராக நடைபெற்று வருவதாகவும், விரைவில் அதைக் கொண்டு, 55 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய ரயில்வே ஊழியரும் தங்கள் வேலையை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

மேலும், அடுத்த ஆண்டுக்குள்   (2020) ரயில்வேயில் 30 ஆண்டு சேவையை நிறைவு செய்யும் ஊழியர்களையும் இந்த பணி நீக்கங்களுக்கு பரிசீலிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி, இந்திய ரயில்வேயில் 13 லட்சம் ஊழியர்கள் உள்ளனர். இதை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி,  அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையை 10 லட்சமாக குறைக்க விரும்புகிறது.

இதற்காக காரணமாக கூறப்படுவது, ரயில்வேயின் வருமானத்தில்  66% சம்பளம் மற்றும் ஓய்வூதிய நிதிகளுக்கு மட்டுமே செலவாகி விடுவதாகவும், ஒவ்வொரு ஊதியக்குழு பரிந்துரை களின்போதும் இது மேலும் அதிகரித்து வருவதால், ரயில்வே துறையில் மேம்பட்ட   நடவடிக்கை களை மேற்கொள்ள நிதித்தட்டுப்பாடு ஏற்படுவதாகவும், அதன் காரணமாகவே  ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

55+ வயதுடைய பணியாளர்களை பணிநீக்கம் செய்வதன் மூலம், இந்திய ரயில்வே மந்தநிலையை குறைத்து, பணத்தை மிச்சப்படுத்தும் நோக்கில் நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்திய ரயில்வே, ரயில்வே ஊழியர்களின் செயல்திறன் குறித்து அவ்வப்போது மதிப்பீடுகள் நடைபெறும், இது வாடிக்கையான ஒன்றுதான்,  புதிதாக எதுவும் இல்லை என்றும், இப்போதைக்கு,  ஊழியர்களை நீக்க எந்த ஏற்பாடும் இல்லை கூறி உள்ளது. ஆனால், மத்திய அரசின் இந்த முடிவு ரயில்வே தொழிலாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே நாட்டின் சில பகுதிகளில் ரயில் சேவையை தனியாருக்கு  கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ள ரயில்வேதுறை, தற்போது ஊழியர்களை மொத்தமாக வீட்டுக்கு அனுப்பவும் முடிவு செய்துள்ளது ரயில்வே ஊழியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source and Credit: https://trak.in