மே.வங்க மாநிலத்தில் 30 சதவீத முஸ்லிம்கள் உள்ளனர். அந்த மாநிலத்தில் இன்னும் மூன்று மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது.

இந்த நிலையில் அங்குள்ள முஸ்லிம்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற புர்புரா ஷெரீப் அமைப்பின் தலைவர் அப்பாஸ் சித்திக், கடந்த வாரம் “இந்தியன் மதச்சார்பற்ற முன்னணி” என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ள அப்பாஸ் சித்திக் நேற்று பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

“மே.வங்க மாநிலத்தில் இந்துக்களையும், முஸ்லிம்களையும் முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரினாமூல் காங்கிரஸ் அரசு பிளவு படுத்தி விட்டது” என்று குற்றம் சாட்டிய சித்திக், “முஸ்லிம்களுக்கு, மம்தா பானர்ஜி நல்லது செய்ததை விட கெடுதல்களையே கூடுதலாக செய்துள்ளார்” என குறிப்பிட்டார்.

“மே.வங்க சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் தலைமையிலான இடதுசாரிகள் மற்றும் ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம். ஆகிய கட்சிகளுடன் தனது கட்சி கூட்டணி சேருவதற்கான வாய்ப்புகள் உள்ளன” என்று சித்திக் தெரிவித்தார்.

திரினாமூல் காங்கிரஸ் கட்சிக்கு செல்ல வேண்டிய வாக்குகளை பிரிப்பதற்காகவே, தான் அரசியல் கட்சி தொடங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டை அப்பாஸ் சித்திக் திட்டவட்டமாக மறுத்தார்,

– பா. பாரதி