கடற்படை ரகசியங்களைப் பாகிஸ்தானுக்கு விற்ற வீரர்கள் : அள்ள அள்ள வரும் அதிர்ச்சித் தகவல்கள் 

டில்லி

ந்திய கடற்படையின்  முக்கியமான ரகசியங்களை நமது வீரர்களே பணத்துக்கும், பெண்ணுக்கும் மயங்கி பாகிஸ்தான் உளவுத்துறைக்கு விற்பனை செய்துள்ளதாக அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கடற்படை வீரர்கள், நமது போர்க்கப்பல்கள் குறித்த ரகசியத் தகவல்களைப் பாகிஸ்தான் உளவுத்துறைக்குக் கொடுத்து வருவதாகத் தகவல் கிடைத்தது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை வீரர்களுக்கு இந்த சதியில் தொடர்பு இருப்பதாக ஆரம்பத்தில் சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து இந்த சதியைக் கண்டறிய ‘டோல்பின் நோஸ்’ என்ற பெயரில் நடவடிக்கையைத் தொடங்கியது, தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ).

கடந்த சில மாதங்களாக நடந்த இந்த நடவடிக்கையில் ராணுவ உளவுப் பிரிவு,ஆந்திர மாநில உளவுப் பிரிவு அதிகாரிகளும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

இதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு கடற்படை தளங்களிலும் , வேறு சில இடங்களிலும் சோதனை நடத்தி 13 வீரர்களைக் கைது செய்தனர்.

இந்திய கடற்படை தகவல்களை வீரர்களிடம் இருந்து  பெறுவதற்கு மூளையாகச் செயல்பட்ட பாகிஸ்தான் உளவாளியும் கைது செய்யப்பட்டான். தன்னை ஒரு வியாபாரியாக அறிமுகம் செய்து கொண்டு வீரர்களிடம் பழகியுள்ளான். பணம் மற்றும் பெண்களை வீரர்களுக்கு விநியோகம் செய்து  கடற்படை ரகசியங்களைப் பெற்று பாகிஸ்தான் உளவுத்துறைக்கு இவன் தான் கொடுத்துள்ளான்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில்  அதிர வைக்கும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.

கடலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியக்  கப்பல்களின் பெயர் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களின் பெயர்கள், உயர் அதிகாரிகள் பெயர், கப்பல்கள் செல்லும் பாதை, அண்மையில் பணியில் சேர்ந்த சகாக்கள் குறித்த விவரங்களைச் சதி செயலில் ஈடுபட்ட வீரர்கள் அளித்துள்ளனர்.

பாகிஸ்தான் உளவுத்துறைக்கு உளவு சொன்ன வீரர்கள் வங்கிக் கணக்கில் பெரும் அளவிலான பணம் செலுத்தப்பட்டுள்ளது.

அந்த வங்கிகளில் விசாரணை நடத்திய என்.ஐ.ஏ.அதிகாரிகள் , சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் பணம்  பரிவர்த்தனை செய்யப்பட்டது குறித்து ஏன் உயர் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தவில்லை எனச் சம்மந்தப்பட்ட வங்கி அதிகாரிகளைக் கேள்விக் கணைகளால் துளைத்து எடுத்துள்ளனர்.

இந்த ரகசியத் தகவல்கள் ,ஒரு வேளை தீவிரவாதிகள் கையில் கிடைத்திருக்குமோ என்ற சந்தேகமும் என்.ஐ.ஏ.க்கு எழுந்துள்ளது.

கைதான பாகிஸ்தான் உளவாளிக்கு எத்தனை வீரர்களுடன் தொடர்பு  இருந்தது?எத்தகைய ரகசியங்கள் பாகிஸ்தானுக்குக் கசிய விடப்பட்டன என்று தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

– ஏழுமலை வெங்கடேசன்

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Indian Soldiers, Navy secrets, Pakistan, Patrikaidotcom, selling, tamil news, இந்திய வீரர்கள், கடற்படை ரகசியங்கள், பாகிஸ்தான், விற்பனை
-=-