இந்திய பங்கு வர்த்தக சந்தை ஜெர்மனியை பின் தள்ளி உலகின் ஏழாம் இடம் பிடித்தது

டில்லி

ந்திய பங்கு வர்த்தக சந்தை முன்னேறி ஏழாம் இடத்துக்கு வந்து ஜெர்மனியை பின் தள்ளி உள்ளது.

ஆசிய நாடுகளின் பங்கு வர்த்தக சந்தை நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. கடந்த 7 ஆண்டுகளாக இந்தச் சந்தை தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. இதில் இந்தியாவின் பங்கு அதிக அளவில் உள்ளது. பல ஐரோப்பிய முதலீட்டாளர்கள் இந்திய நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஆசிய நாடான சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் வர்த்தகப் போர் தொடங்கியது.

இதனால் சீன நிறுவனங்களின் பங்குகளின் விலைகள் சர்வதேச அளவில் சரியத் தொடங்கின. அதற்கு முக்கிய காரணம் பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஒரே நேரத்தில் தங்கள் பங்குகளை விற்பனை செய்தது ஆகும். அந்த முதலீட்டாளர்களின் அடுத்த தேர்வாக இந்தியா இருந்துள்ளது. ஆகவே இந்தியப் பங்குகளை வாங்க பலரும் ஆர்வம் காட்டியதால் இந்திய பங்குச் சந்தையின் வாடிக்கையாளர்கள் அதிகரிக்க தொடங்கினார்கள்.

பங்குச் சந்தை அளவு என்பது முதலீட்டாளர்களின் எண்ணிக்கையை பொறுத்தே நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வரிசையில் தற்போது இந்தியா 7 ஆம் இடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன்பு ஐரோப்பிய நாடான ஜெர்மனி 7 ஆம் இடத்தில் இருந்துள்ளது. பல சர்வதேச முதலீட்டாளர்களின் விருப்ப நாடாக இருந்த ஜெர்மனியின் பங்குச் சந்தையை விட இந்தியா விரிவடைந்துள்ளது.