சென்னை,

னாதிபதி தேர்தலில் பாரதியஜனதாவுக்கு ஆதரவாக அதிமுக வாக்களிக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

அவரது அறிவிப்பை புறந்தள்ளிவிட்டு அதிமுகவின் சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் என்று  இந்திய தவ்ஹீத் ஜமாத் லைவர் எஸ் எம் பாக்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜகவின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளதாக வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கக்கூடியது. வன்மையாக கண்டிக்கக்கூடியது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கொள்கைக்கும் விருப்பத்திற்கும் முழுக்க முழுக்க விரோதமானது ஆகும்.இது அந்த அம்மையாருக்கு செய்யும் பச்சைத்துரோகமாகும்.

2016 சட்டமன்றத்தேர்தலில் அதிமுக அணி வெற்றிபெற அயராது பாடுபட்ட மதசார்பற்ற மற்றும் சமூக நீதி முற்போக்கு சக்திகளின் முகத்தில் கரிபூசும் செயல்தான் இது என்பதில் ஐயமில்லை.

மத்திய பாஜக அரசின் அழுத்தத்தினாலேயே முதல்வர் எடப்பாடி இந்த முடிவை எடுத்து வரலாற்று களங்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

அதிமுகவின் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழக அரசை கிள்ளுக்கீரையாக நினைத்து அடக்கியாள நினைக்கும் பாஜகவுக்கு பாடம் கற்பிக்கும் விதமாக குடியரசுத்தலைவர் தேர்தலில் முதல்வர் எடப்பாடியின் முடிவை புறந்தள்ளிவிட்டு,மனசாட்சியோடு எதிர்க்கட்சிகளின் வேட்பாளரை ஆதரித்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தமிழகம் சமூக நீதி தத்துவத்தின் தாய்ப்பூமி இது என்றும் பாசிசத்திற்கு அடிபணியாது என்பதை நிரூபிக்கும் வகையில் பாஜகவுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.