கயானா: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஐந்தாவது டி-20 போட்டியையும் வென்று, தொடரை முற்றிலுமாக கைப்பற்றி, எதிரணியை ஒயிட்வாஷ் செய்துள்ளது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி.

5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், 5வது போட்டி‍யை 61 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.

டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி, களமிறங்கிய அணிக்கு, ரோட்ரிகஸ் 50 ரன்கள் மற்றும் கிருஷ்ணமூர்த்தி 57 ரன்கள் அடிக்க, 20 ஓவர்களில் மொத்தமாக 3 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களை எடுத்தது இநதிய மகளிர் அணி.

பின்னர், 135 ரன்களை இலக்காகக் கொண்டு களத்திற்கு வந்த மேற்கிந்திய தீவுகள் மகளிர் கிரிக்கெட் அணியினரால் 73 ரன்களுக்கு மேல் எடுக்க முடியவில்லை என்பதுதான் சோகம்.

அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 7 விக்கெட்டுகளை இழந்து, இந்த சொற்ப ரன்களை எடுத்தனர். அந்த அணியின் கிஷோனா நைட் 22 ரன்களும், கேம்ப்பெல் 19 ரன்களும் அதிகபட்சமாக எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம், இந்திய மகளிர் அணி, 5 போட்டிகள் கொண்ட தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக வென்று சாதித்துள்ளது.