பூமியில் இருந்து 400 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் மாபெரும் விண்மீன்  கூட்டம் ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.  அதற்கு ‘சரஸ்வதி’ என்று பெயர் சூட்டியுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் புனேயில்,  இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு மையம் இயங்குகிறது. இங்கு ஆய்வு மாணவர் ஷிஷிர் சங்க்யாயன் தலைமையிலான விண்வெளி ஆராய்ச்சிக் குழு இந்த புதிய  விண்மீன்  கூட்டத்தைக் கண்டறிந்துள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட விண்மீன்  கூட்டத்திலேயே  இதுவே மிகப்பெரியதாகும்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பு சார்பில் வெளியிடப்படும் பத்திரிகை, இந்த ‘சரஸ்வதி’ விண்மீன்  கூட்டம் குறித்த விரிவான ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இளம் இந்திய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புக்கு உலகலாவிய  அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

‘சரஸ்வதி’ விண்மீன்  கூட்டத்தில் எண்ணற்ற கிரகங்கள் ஈர்ப்பு விசையினால் ஒன்றுடன் ஒன்று பிணைந்து கூட்டமாக்கக் காணப்படுகின்றன. பல ஆயிரம் கோடி சூரியக்குடும்பங்கள் இதில் அடங்கும். பூமிக்கு மிகவும் தொலைவில் அமைந்துள்ள இந்த விண்மீன்   கூட்டத்தைப் பற்றிய ஆய்வை இந்திய விஞ்ஞானிகள் தொடர்ந்து மேற்கொள்ள இருக்கிறார்கள்.