டோக்கியோ ஒலிம்பிக்கை நோக்கி முன்னேறும் இந்திய துப்பாக்கிச் சுடும் அணியினர்

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் நடைபெறும் ஐ.எஸ்.எஸ்.எஃப். ஷாட்கன் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் கலந்துகொள்வதன் மூலம், 12 பேர் கொண்ட இந்திய துப்பாக்கிச் சுடும் குழு, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான 8 ஒதுக்கீட்டு இடங்களைப் பிடிக்க போட்டியிடுகிறது.

இந்தாண்டின் முதல் உலகக் கோப்பை ஷாட்கன் துப்பாக்கிச் சுடும் போட்டியில், 5 விதமான போட்டிகள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன.

இந்தியக் குழுவில் முன்னாள் உலகச் சாம்பியன் மனவ்ஜித் சிங் சந்து மற்றும் தற்போதைய இறுதிப்போட்டி உலக சாதனையாளர் அங்கத் வீர் சிங் பஜ்வா ஆகியோரும் அடக்கம்.

இதுவரை இந்தியா சார்பில், டோக்கியோ ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடும் போட்டிகளுக்காக, மொத்தம் 3 இடங்கள் வெல்லப்பட்டுள்ளன. இந்தவகையில், ஒதுக்கீட்டு இடங்களைப் பெற்றதில், உலகளவில் 5 முன்னணி நாடுகளுள் ஒன்றாக முன்னேறியுள்ளது இந்தியா.

ஆனால், இந்தியாவால் வெல்லப்பட்ட இடங்கள் அனைத்தும் ரைஃபிள் மற்றும் பிஸ்டல் பிரிவுகளைச் சார்ந்தவையே.

– மதுரை மாயாண்டி