தோனியைப் போன்ற ஒருவர் இந்திய அணிக்குத் தேவை: மைக்கேல் ஹோல்டிங்

மும்பை: இந்திய அணிக்கு மகேந்திரசிங் தோனியைப் போன்ற ஒரு வீரர் தேவை என்றுள்ளார் விண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங்.

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் கிடைத்த தோல்வியை அடுத்து, இவ்வாறு கூறியுள்ளார் ஹோல்டிங்.

அவர் பேசியுள்ளதாவது, “ஆஸ்திரேலியா நிர்ணயித்த பெரிய இலக்கை அடைவது இந்தியாவிற்கு சிரமமாக இருந்தது. தோனி போன்ற ஒரு வீரர் அணியில் இல்லாதது இதற்கு காரணமாக இருக்கலாம்.

பேட்டிங் வரிசையில், பின்பாதியில் களமிறங்கும் தோனி, சேஸிங்கை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வார். ஆனால், தற்போது அவரின் அமைதியான மற்றும் கட்டுப்படுத்தும் ஆட்டத்தை இந்தியா இழந்துள்ளது.

அவர் இடம்பெற்ற பல ஆட்டங்களில், சேஸிங்கின்போது இந்திய அணி வென்றுள்ளது. இந்திய அணியில், தற்போது பல திறமையான பேட்ஸ்மென்கள் உள்ளனர் என்பதை மறுக்கவில்லை. ஆனாலும் தோனியைப் போன்ற ஒரு வீரர் அந்த அணிக்குத் தேவை.

தோனியைப் பொறுத்தவரை, அவரின் திறமை மட்டுமல்ல; அவரது மனவலிமையும் பிரதானமாக குறிப்பிடத்தக்கது. ரன் சேஸிங் செய்கையில், தோனி பயந்ததை நாம் எப்போதும் கண்டதில்லை” என்றுள்ளார் ஹோல்டிங்.