ஆக்லாந்து: 2021ம் ஆண்டு நியூசிலாந்து நாட்டில் நடைபெறவுள்ள 50 ஓவர் ஐசிசி பெண்கள் உலகக்கோப்பை தொடருக்கு தகுதிபெற்றுள்ளது இந்தியப் பெண்கள் அணி.

2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6 முதல் மார்ச் 7 வரை, நியூசிலாந்தில் பெண்கள் 50 ஓவர் உலகக்கோப்பைத் தொடர் நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடும்.

தொடரை நடத்தும் நாடு என்ற அடிப்படையில், நியூலாந்து அணிக்கான இடம் கட்டாயம். இத்தொடருக்கு ஏற்கனவே, போட்டிகளின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட அணிகள் தகுதிபெற்றன.

நான்காவது இடத்திற்கு இந்தியாவா, பாகிஸ்தானா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், இரு அணிகளும் ஆடவிருந்த தகுதிப்போட்டி ரத்தானது. எனவே, சமமாக பிரித்து வழங்கப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில், இந்திய அணி மொத்தமாக சேர்த்து 23 புள்ளிகளைப் பெற்று 4வது அணியாக தொடருக்கு தகுதிபெற்றது.

இதுவரை, இத்தொடருக்கு, ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் தகுதிபெற்றுள்ளன. மீதமுள்ள 3 அணிகள் எவை என்பதைத் தீர்மானிக்கும் போட்டிகள் ஜுலை மாதம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.