தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மாவின் அசத்தல் சதம் காரணமாக, இந்திய அணி சரிவிலிருந்து மீண்டுள்ளது.

இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்க அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி கண்ட இந்திய அணி, தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. இத்தகைய சூழலில் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, ராஞ்சியில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. இப்போட்டியில் இஷாந்த் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ஷபாஸ் நதீமுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா – மாயங்க் அகர்வால் ஜோடி, துவக்கத்திலேயே ஏமாற்றத்தை தந்தது. 10 ரன்கள் எடுத்திருந்த போது ரபாடா வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து மாயங்க் அகர்வால் வெளியேற, அவரை தொடர்ந்து வந்த புஜாரா ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். பின்னர் களமிறங்கிய கேப்டன் விராத் கோஹ்லி வெறும் 12 ரன்களை மட்டுமே குவித்து, நார்ட்ஜே வீசிய பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் வெளியேறி ஏமாற்றம் தந்தார். இதனால் 39 ரன்களுக்கே 3 விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாறியது.

ஒருபக்கம் விக்கெட்கள் விழுந்தாலும் மறுபக்கம் நிதானமாக ஆடிய ரோகித் சர்மாவுக்கு, ரகானே ஒத்துழைப்பு தந்தார். நிதானமான ஆட்டத்தை விளையாடிய இந்த ஜோடி, மெல்ல அணியை சரிவில் இருந்து மீட்டது. ராபாடாவின் பந்தில் நான்கு ரன்கள் அடித்து ஒருபுறம் ரோகித் தனது அரைசதத்தை கடக்க, மற்றொரு புறம் பிய்ட் வீசிய பந்தில் 1 ரன் எடுத்து தனது அரைசதத்தை ரகானே பூர்த்தி செய்தார். டேன் பிய்ட் வீசிய போட்டியின் 45வது ஓவரின் 4வது பந்தில் சிக்சர் அடித்த ரோகித் சர்மா, தனது 6வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். இதனால் உணவு இடைவேளியின் போது இந்திய அணி 195 ரன்களுக்கு 3 விக்கெட்களை மட்டுமே பறிகொடுத்து, சரிவிலிருந்து மெல்ல மீண்டு வந்தது.

உணவு இடைவேளிக்கு பின்னும் தொடர்ந்து நிதானமான ஆட்டத்தை இந்த ஜோடி வெளிப்படுத்த, போதிய வெளிச்சமின்மை காரணமாகவும், மோசமான வானிலை காரணமாகவும் 58 ஓவர்கள் மட்டும் வீசப்பட்ட நிலையில் இன்றைய ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 224 ரன்களை குவித்திருந்தது. இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா 117 ரன்களுடனும், ரகானே 83 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென்னாப்பிரிக்க அணி தரப்பில் ரபாடா 2 விக்கெட்களையும், நார்ட்ஜே 1 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.