ரூ.5 லட்சம் கோடிகள் வரை இழப்பை சந்திக்கும் இந்திய சுற்றுலா & பயணங்கள் துறை!

புதுடெல்லி: தொடர்ச்சியான ஊரடங்கு மற்றும் அடுத்துவரும் நாட்களில் தொடரக்கூடிய மந்தம் காரணமாக, இந்தியாவின் சுற்றுலா மற்றும் பயணங்கள் துறையில் ரூ.5 லட்சம் கோடிகள் வரை இழப்பு ஏற்படலாம் என்று ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அதில் கூறப்பட்டுள்ளதாவது; முறைப்படுத்தப்பட்ட பிரிவில் மட்டும் ரூ.1.85 லட்சம் கோடிகள் இழப்பு ஏற்படும். இந்திய சுற்றுலா மற்றும் பயணங்கள் துறை, இத்தகைய நெருக்கடியை இதற்கு முன்னதாக சந்தித்ததில்லை. இந்த பாதிப்பு, இத்துறையின் அனைத்துப் பிரிவுகளுக்கும்தான்.

அதாவது, சாகசப் பயணங்கள், பாரம்பரிய இடங்களுக்குப் பயணம் செய்தல், சொகுசு கப்பல் பயணம், ஓய்வுப் பயணம் என்று பல்வேறு பிரிவுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த மந்தநிலை, அடுத்தாண்டின் துவக்கம் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இழப்பு என்பது ரூ.5 லட்சம் கோடிவரை இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

அடுத்த சில மாதங்களுக்கு, ஹோட்டல்களில் 30% வரையிலான அறைகள் மட்டுமே நிரம்பும் என்றும், வருவாயில் 80% முதல் 85% வரை இழப்பு ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.