இந்திய நடுவர் நிதின் மேனனுக்கு கிடைத்த புதிய கெளரவம்..!

துபாய்: ஐசிசி அமைப்பின் புகழ்பெற்ற கிரிக்கெட் நடுவர்கள் பேனலில், இந்தியாவின் நிதின் மேனன் இடம்பெற்றுள்ளார். விளையாட்டினுடைய நிர்வாகக் குழுவின் வருடாந்திர மதிப்பாய்வுக்குப் பிறகு இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

இந்த 2020-21 சீசனுக்கான எலைட் குழு உறுப்பினராக தேர்வாகியுள்ளார் இவர். இவருக்கு தற்போதைய வயது 36. மிகக்குறைந்த வயதில் இந்த புகழ்பெற்ற குழுவில் இடம்பெறுபவர்களில் இவரும் ஒருவர்.

இவர், இங்கிலாந்து நாட்டின் நைஜல் லாங்கின் இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தப் புகழ்பெற்ற குழுவானது, ஐசிசி கிரிக்கெட் பொது மேலாளர் ஜியோஃப் அலார்டிஸ், சஞ்சய் மன்ஜ்ரேக்கர், ஆட்ட ரெஃப்ரீக்கள் ரன்ஜன் மதுகலோ மற்றும் டேவிட் பூன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நிதின் மேனன் கடந்த 2017ம் ஆண்டுதான் முதன்முதலாக நடுவர் பணியாற்றத் தொடங்கினார். இவர் இதுவரை 3 டெஸ்ட் போட்டிகள், 24 ஒருநாள் போட்டிகள் மற்றும் 16 டி-20 போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியுள்ளார். மேலும், 10 மகளிர் டி-20 போட்டிகளிலும் நடுவராகப் பணியாற்றியுள்ளார்.

இவருக்கு முன்பாக, இந்தியாவிலிருந்து எஸ்.வெங்கட்ராகவன் மற்றும் எஸ்.ரவி ஆகியோர் அந்தப் புகழ்பெற்ற பேனலில் உறுப்பினரான கவுரவத்தைப் பெற்றுள்ளனர்.

“இந்தப் புகழ்பெற்ற பேனலில், உறுப்பினராகும் வாய்ப்புக் கிடைத்தது எனக்கான கெளரவம்” என்று தெரிவித்துள்ளார் நிதின் மேனன்.