டெல்லி:

பாராளுமன்றத்தில் இன்று தேசிய குடியுரிமை மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்து வரும் நிலையில், தமிழக முஸ்லிம் கட்சியைச் சேர்ந்த நவாஸ்கனி எம்.பி. உள்பட  அசாம் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மோடி தலைமையிலான பாஜகவின் கடந்த ஆட்சியின்போது, குடியுரிமை திருத்த மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாத நிலையில், காலாவதியானது. இதையடுத்து, இன்று பாராளுமன்ற லோக் சபாவில், உள்துறை அமைச்சர் குடியுரிமை திருத்த மசோதாவை தாக்கல் செய்து வருகிறார்.

அதன்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்கு திமுக உள்பட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திமுக கூட்டணியைச் சேர்ந்த முஸ்லிம் கட்சி எம்.பி. நவாஸ்கனி உள்பட அசாம் மாநில எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்திசிலை முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். மதரீதியாக மக்களைப் பிரித்து குடியுரிமை வழங்க மத்திய அரசு முயல்வது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.