டெல்லி:

பல்கலைக்கழகம் என்பது கடட்டங்களின் தொகுப்பு, கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி கூடங்களின் தொகுப்பு, தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கும் மையம் என்ற சம்பிரதாய கூடாரகமாகவே நம்நாட்டில் இருக்கிறது என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கட்டுரை எழுதியுள்ளார்.

அதில், அவர் மேலும் கூறியிருப்பதாவது:

இந்த பூமியில் ஒரு இடம் அனைத்து விதிகளையும் மீறும் இடமாக இருக்கும் என்றால் அது பல்கலைக்கழகமாக தான் இருக்கும். அந்த அளவுக்கு இந்தியாவில் பல்கலைக்கழகங்களில் நிலை உள்ளது. சிறந்த ஆசிரியர்களை மட்டுமே கொண்டு ஒரு பல்கலை க்கழகம் சிறந்தது என்று கூற முடியாது. அங்கிருந்து வெளியேறும் மாணவர்கள் அறிவு திறன் கொண்டவர்களாகவும், உருவாக்கும் திறன் கொண்டவர்களாகவும் இருந்தால் மட்டுமே பல்கலைக்கழகத்தின் மீது ஈர்ப்பு ஏற்படும்.

ஹார்வர்டு பல்லைக்கழகம் எப்படி அறிவின் பெட்டகமாக தொடர்ந்து திகழ்கிறது என்ற கேள்விக்கு அதன் தலைவர் கூறுகையில்,‘‘ புதிதாக வரும் மாணவர்கள் அடங்கிய வகுப்பு நிறைய அறிவுகளை கொண்டு வருகிறது. பட்டம் பெற்று செல்பவர்கள் குறைந்த அளவே இங்கிருந்து கொண்டு செல்கிறார்கள்’’என்று தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் கூட ஹார்வர்டு, ஸ்டான்போர்டு, ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், மெக்கில், சோர்பைன்
போன்ற பல்கலைக்கழகங்களுக்கு இணையாக இல்லை. சீன பல்கலைக்கழகங்கள் கூட உலகளவில் முதல் 10, 50, 100 பல்கலை க்கழக பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்திய பல்கலைக்கழகங்கள் 200 முதல் 250 பட்டியலில் தான் வருகிறது.

இந்திய பல்கலைக்கழகங்களுக்கு நிதி ஒரு கட்டுப்பாடாக இருப்பதாக தெரியவில்லை. எவ்வித நிபந்தனையுமின்றி மத்திய பட்ஜெட்டில் இருந்து பெங்களூரு இந்திய அறிவியல் மையத்துக்கு ரூ. 100 கோடி மானியமாக வழங்கினேன். இதை தொடர்ந்து கொல்கத்தா, மும்பை, சென்னை பல்கலைக்கழகங்களுக்கு தலா ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியை கொண்டு பல்கலைக்கழகங்கள் வளர்ச்சி அடைந்ததாக தெரியவில்லை. அங்குள்ள நிர்வாகிகளுக்கு இந்த தொகையை எப்படி பயன்படுத்துவது என்பது கூறி சரியாக தெரியவில்லை.

பல்கலைக்கழக விதிகள் காலவதியானதாக இருக்கிறது. துணைவேந்தர்கள் நியமனத்தை மத்திய, மாநில அரசுகள் கையில் எடுத்துக் கொண்டுள்ளது. பல நியமனங்கள் முறைகேடாக தான் நடக்கிறது. மிகவும் மோசமான முறையில் பாடம் நடத்தப்படுகிறது. சில இடங்களில் ஆராய்ச்சிகள் நடக்கிறது. சில பல்கலைக்கழகங்களில் இது அறவே இல்லை. இது அல்லாது பல்கலைக்கழக மானிய குழு ஒரு கட்டுப்பாட்டாளராக இருக்கிறது.

நீதிமன்றங்கள் அல்லது மாநில அரசு குழுக்கள் பல்கலைக்கழகங்களின் மாணவர் சேர்க்கை, கல்வி கட்டணம் போன்றவற்றை கையில் எடுத்துக் கொள்கிறது. பல்கலைக்கழகங்களை நிர்வகிக்கும் அதிகாரம் பல இடங்களில் சிதறி கிடக்கிறது. இதனால் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி அதிகாரம் சிதைந்துவிட்டது.

அரசுகளின் தலையீடு காரணமாக பல கல்வியாளர்கள் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறுவது சமீபகாலமாக நடக்கிறது. அறிவு களஞ்சியத்தின் தீவாக விளங்க வேண்டிய மத்திய பல்கலைக்கழகங்கள், ஐஐடி, ஐஐஎம் போன்றவை பிற மாநில கல்வி நிறுவனங்களை போல் மோதல், பிரச்னைகள் நடக்கும் இடங்களாக மாறி வருகிறது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், நலந்தா பல்கலைக்கழகம், ஐதராபாத் பல்கலைக்கழகம் இதற்கு சிறந்த உதாரணமாக திகழ்கின்றன.

உயர்கல்வி பெற மாநில நிதியாதாரத்துடன் செயல்படும் பல்கலைக்கழகங்களை தவிர வேறு வழி இல்லாத நிலை இந்தியாவில் உள்ளது. இதனால் சுதந்திரமாக அரசின் கட்டுப்பாடின்றி செயல்படக் கூடிய தனியார் பல்கலைக்கழகங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. எந்த பல்கலைக்கழகமாக இருந்தாலும் கீழே உள்ள கோட்பாடுகள் இருந்தால் கல்வியின் தரம் உயரும் என்பதில் சந்தேகமில்லை..

* பல்கலைக்கழகங்களில் வெளிப்படையான மற்றும் தூய்மையான சுதந்திரமான நிர்வாக குழு இருக்க வேண்டும். இவர்களை தேர்வு செய்வதற்கு வெளிப்படையான விதிமுறைகள் வகுக்க வேண்டும்.

* பல்கலைக்கழகம் லாப நோக்கம் கொண்டதாக இருக்க கூடாது. உபரி வருமானங்களை மீண்டும் பல்கலைக்கழகத்திலேயே முதலீடு செய்ய வேண்டும்.

* மாணவர் சேர்க்கை மற்றும் பணி நியமனத்தில் சமூகம் மற்றும் கல்வியில் பின் தங்கிய மக்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதியாக பின்பற்ற வேண்டும்.

சாதாரண ஒரு மனிதரின் குற்றச்சாட்டில் இருந்து கூட பல்கலைக்கழகங்கள் தப்ப முடியாது. சிறந்த பல்கலைக்கழகங்கள் இ ந்தியாவில் இல்லாத தற்போதைய நிலையிலேயே மாணவர்கள் கடின உழைப்பின் மூலம் பல சாதனைகளை புரிந்து வருகின்றனர். தங்களது திறன் மூலம் பணிக்கு உத்தரவாதம் அளிக்கும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களிலும் சேர்ந்து பயில்கின்றனர்.

தற்போது நிலவும் இந்திய பல்கலைக்கழக நடைமுறை என்பது உடைந்துபோன நடைமுறையாக உள்ளது. இதனால் மாணவர்கள் தங்களது திறனை வெளிக் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என்ற அழுகுரல் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறது.

இவ்வாறு ப.சிதம்பரம் அந்த கட்டுரையில் தெரிவித்துள்ளார்.