புதுடெல்லி: நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கை விசாரித்த பெண் காவல்துறை அதிகாரி சாயா ஷர்மாவுக்கு, 2019ம் ஆண்டிற்கான ஆசியா சொசைட்டி கேம் சேன்ஜர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண் காவல்துறை அதிகாரிகளுக்கான பணியை மறுவரையறை செய்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவருடன் சேர்ந்து இதர 6 நபர்களுக்கும் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒரு விழாவில் வழங்கப்படும். ஆசியா சொசைட்டி என்பது கல்வி தொடர்பான ஒரு முன்னணி நிறுவனமாகும்.

ஆசியா மற்றும் அமெரிக்காவிலுள்ள பொதுமக்கள், தலைவர்கள் மற்றும் நிறுவனங்களிடையே பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காக இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் கமிஷனில் டிஐஜி நிலையில் பணியாற்றிய ஷர்மா, இந்த விருது பெறுபவர்களில் ஒருவர்.

மேலும், இந்தியா மற்றும் நேபாள நாட்டைச் சேர்ந்த குங்ஃபூ சந்நியாசிகளும் இந்த விருதைப் பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.