அரிய நோயால் பாதிக்கப்பட்ட இந்திய பெண் இங்கிலாந்திலிருந்து வெளியேற்றுவதை எதிர்த்து போராட்டம்

லண்டன்:

அரிதான பெருங்குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இந்திய இளம்பெண் அங்கிருந்து வெளியேற்றப்படுவதை எதிர்த்து போராடி வருகிறார்.


பிரிட்டனில் கல்வி கற்க வந்த இந்திய பெண் பவானி எஸ்பாதி, அரிதான பெருங்குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார்.

அவருக்கு லண்டனில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த நோய்க்கு இந்தியாவில் சிகிச்சை இல்லை.

எனவே, இங்கிலாந்தில் தங்கியிருந்து சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என அந்நாட்டின் உள்துறை அலுவலகத்துக்கு பவானி எஸ்பாதி கடிதம் அனுப்பினார்.

ஆனால், அவரது கோரிக்கையை நிராகரித்த இங்கிலாந்து உள்துறை, அவரை வலுக்கட்டாயமாக இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டது.

அனுமதி மறுத்து கடிதம் வந்தபோது, பெரிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பவானி எஸ்பாதி கோமா நிலைக்குச் சென்றார்.
இந்த நிலையில், பவானி எஸ்பாதி பயணம் செய்தால், அவரது உயிருக்கு ஆபத்து என டாக்டர்கள் தெரிவித்தனர்.

கோமாவிலிருந்து மீண்ட பவானி எஸ்பர், இங்கிலாந்தில் இருக்கும் மருந்து இந்தியாவில் கிடைக்காது என்பது உண்மைதான். ஆனால், குடும்ப ஆதரவு கிடைக்கும் என்று அரசு தரப்பில் கூறுகின்றனர்.

சிகிச்சை செய்ய முடியாத நிலையில், குடும்ப ஆதரவு இருந்து என்ன பயன் என நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கேள்வி எழுப்பியுள்ளார்.

பவானி இங்கிலாந்தில் தங்கி சிகிச்சை பெற அனுமதி மறுத்ததை இங்கிலாந்து அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இங்கிலாந்து உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும்போது, பவானி எஸ்பர் விவகாரத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோரிக்கைக்கு வலு சேர்க்கும் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன.

இங்கிலாந்தில் தங்கி அவர் சிகிச்சை பெற அனுமதி மறுத்து பிறப்பித்த உத்தரவு மறு பரிசீலனை செய்யப்படும் என்றார்.