ஆண்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

ஐசிசி பெண்கள் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சென்று, 3 ஒருநாள் போட்டிகளில் பங்க‍ேற்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்திய மகளிர் அணியின் உறுப்பினர்களுக்கு தினசரி பேட்டா தொகைக்கூட முறையாக கிடைக்காமல் திண்டாடுவதாக செய்தி வெளியாகி பரபரப்பு கிளம்பியது.

எப்படியோ பிரச்சினை சமாளிக்கப்பட்டு, முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்றது இந்திய அணி. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. பெரிதாக ரன் குவிக்கத் தவறிய அந்த அணி, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து வெறும் 225 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த அணியில் கேப்டன் டெய்லர் 94 ரன்களையும், செடீன் 43 ரன்களையும் எடுத்தனர்.

பின்னர் களமிறங்கிய இந்திய அணியில், புனியா 75 ரன்களும், ஜெமிமா 41 ரன்களும், பூனம் ராத் 22 ரன்களும், கேப்டன் மிதாலி 20 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி வெற்றிபெற, கடைசி ஓவரில் 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனாலும் இந்திய அணியால் வெற்றிகரமான ஃபினிஷிங்கை கொடுக்க முடியவில்லை.

இறுதியில், 50 ஓவர்களுக்கு ஆல்அவுட்டாகி, 224 ரன்களே எடுத்து, ஜஸ்ட் 1 ரன்னில் தோற்றுப்போனது இந்திய அணி. வெஸ்ட் இண்டீஸ் அனிசா அதிகபட்சமாக 5 விக்கெட் வீழ்த்தினார். இரண்டாவது போட்டி நவம்பர் 3(ஞாயிறு) அன்று நடைபெறுகிறது.