நாக்பூர்:

ந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியினர் 3 ஒரு நாள் போட்டிகளில் ஆடி வந்தனர்.

இதில் நேற்று நடைபெற்ற 3வது நாள் போட்டியில் இந்திய பெண் அணியினர் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.  இந்திய பெண்கள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள  இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட்  அணி, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. ஏற்கனவே நடைபெற்ற  முதல் போட்டியில் இந்திய பெண்கள் அணி வென்றது. இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து பெண்கள் அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் நேற்று 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாக்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்த போட்டியின்போது  ’டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தது.

இந்திய அணியினரின் பந்துவீச்சை  இங்கிலாந்து அணி பேட்ஸ்வுமன்  எமி ஜோன்ஸ் அனாயசமாக அடித்து  94 ரன்கள் குவித்தார். இறுதியில்  இங்கிலாந்து பெண்கள் அணி, 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்திருந்தது.

அதைத்தொடர்ந்து களம்கொண்ட  இந்திய பெண்கள் அணி தொடக்க  வீராங்கனையான  ரோட்ரிக்ஸ் 2 ரன் எடுத்த நிலையில் கரை திரும்பினார். மற்றொரு தொடக்க வீரரான  மந்தனா 53 ரன்கள் எடுத்த நிலையில், காயம் காரணமாக  ரிட்டையர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார்.

தொடர்ந்து களத்தில் இறங்கிய வேதா கிருஷ்ணமூர்த்தி 7 ரன் எடுத்த நிலையில் வெளியேற்றப்பட்டார். பின்னர் அணி தலைவி மிதாலி,  தீப்தி சர்மா இணை சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதையை நோக்கி திருப்பினர்.

இங்கிலாந்து பவுலர்களின் பந்துவீச்சை சிதறடித்து தூள்தூளாக்கினர். இதையடுத்து  45.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய பெண்கள் அணி அசத்தல் வெற்றியை பெற்றது.

கேப்டன்  மிதாலி 74 ரன்களும் தீப்தி 54 ரன்களும் எடுத்து  அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்நிலையில் இந்திய பெண்கள்  3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பை வென்று சாதித்தது.