இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி புதிய அத்தியாயம் படைக்கும்: பயிற்சியாளர் டபிள்யூவி ராமன் நம்பிக்கை

ஐதராபாத்:

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி புதிய அத்தியாயம் படைக்கும் என தலைமை  பயிற்சியாளர் டபிள்யூ ராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள டபிள்யூ வி ராமன் தமிழகத்தைச் சேர்ந்தவர்.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக டபள்யூவி ராமனை கடந்த டிசம்பர் 20-ம் தேதி பிசிசிஐ நியமித்தது. கபில்தேவ், அன்சுமன் கெய்க்வார்ட் மற்றும் சாந்தா ரங்கசாமி ஆகியோர் கொண்ட குழு நடத்திய தேர்வில் பிசிசிஐ இவரை தேர்வு செய்தது.

கேரி கிரிஸ்டன், ராமன் மற்றும் வெங்கடேஷ் ப்ரசாத் ஆகிய மூவரின் பெயர்கள் இந்தக் குழுவால் பரிசீலிக்கப்பட்டது.
கேரி கிரிஸ்டனின் ஐபிஎல் பொறுப்புகள் அவரை நிராகரிக்க காரணமானது. இறுதியாக டபள்யூவி ராமன் பயிற்சியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

53 வயதான இவர், இந்திய அணிக்காக 11 டெஸ்ட் மற்றும் 27 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ளார். முதல்தர போட்டிகளில் 132 போட்டிகளில் ஆடி 7900 ரன்கள் குவித்துள்ளார். ராமன் தனது கடைசி சர்வதேச போட்டியை 1997ல் தென்னாப்பிரிக்காவுடன் ஆடினார்.

இவர் ஒரே ஒரு சர்வதேச சதமடித்துள்ளார், அது 1992-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக எடுக்கப்பட்டது.

இடதுகை வீரரான இவர், ரஞ்சி போட்டிகளில் தமிழ்நாடு, பெங்கால் அணிகளுக்கு பயிற்சியாளராகவும், ஐபிஎல்லில் கொல்கத்தா அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.

நியூசிலாந்தில் நடைபெறும் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பெண்கள் கிரிக்கெட் அணி பங்கேற்க இருப்பதையொட்டி அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறும்போது, “ஒவ்வொரு பயிற்சியாளருக்கு இந்த பணி சவால் தான். இங்கிலாந்தில் நடந்த பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியினர் அரையிறுதி வரை சென்றனர். இது இந்திய வீராங்கணைகளின் திறமையை வெளிப்படுத்துவதாக அமைந்தது.

கடந்த 18 மாதங்களாக பயிற்சியை நான் வெளியிலிருந்து கவனித்துக் கொண்டிருந்தேன். அனைவரும் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியினர் நியூசிலாந்தில் புதிய அத்தியாயத்தை படைப்பார்கள்” என்றார்.