முதன்முறையாக உலக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த இந்திய மகளிர் டென்னிஸ் அணி!

துபாய்: ஃபெட் கோப்பை ஆசியா ஓசியானிக் குரூப்-1 மகளிர் டென்னிஸ் போட்டியில், இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு, உலகளவிலான குரூப் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

இந்தோனேஷிய அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி, இத்தொடரில் தனது நான்காவது வெற்றியைப் பதிவு செய்தது. சானியா மிர்ஸா மற்றும் அங்கிதா ரெய்னா ஆகியோரின் சிறப்பான செயல்பாடு, இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்தது.

மொத்தம் 6 நாடுகள் பங்க‍ேற்கும் இப்போட்டித் தொடரில், இந்திய அணி தனது முதல் போட்டியில் வலுவான சீனாவை எதிர்கொண்டது.

இந்தோனேஷியாவிற்கு எதிரான போட்டியில், இந்தியாவின் சானியா மிர்ஸா மற்றும் அங்கிதா ஆகியோர், இந்தோனேஷியாவின் பிரிஸ்கா மேட்லின் மற்றும் அல்டிலா சுட்ஜியாடிக்கு எதிராக, 7-6 மற்றும் 6-0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று, இந்தியாவின் வெற்றிக்கு காரணமாயினர்.

இந்திய மகளிர் டென்னிஸ் அணியைப் பொறுத்தவரை, உலகளவிலான பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.