பெண்கள் டி20 உலகக்கோப்பை – இந்திய அணிக்கு 2வது வெற்றி!

மெல்போர்ன்: பெண்கள் டி-20 உலகக்கோப்பை லீக் போட்டியொன்றில், வங்கதேசத்தை 18 ரன்கள் வித்தியாசத்தில் வ‍ென்று, தனது இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்தது இந்திய அணி.

இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. அதன்படி, களமிறங்கிய இந்திய அணியில் வெர்மா 39 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 34 ரன்களும், வேதா கிருஷ்ண மூர்த்தி 20 ரன்களும் அடிக்க, 20 ஓவர்களில் 6 விக்க‍ெட்டுகளை இழந்து, 142 ரன்கள் மட்டுமே எடுத்தது இந்திய அணி.

இந்திய அணியில் இரண்டு பேர் ரன்அவுட் ஆனார்கள். பின்னர், எட்டக்கூடிய இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணியில், முர்திஷா கதூன் 30 ரன்களையும், சுல்தான 35 ரன்களையும் எடுக்க, மற்ற யாரும் 20 ரன்களைக்கூட தொடவில்லை.

20 ஓவர்களின் முடிவில், அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்து, 18 ரன்களில் தோல்வியைத் தழுவியது.

இந்திய தரப்பில் பூனம் யாதவ் 3 விக்கெட்டுகளையும், ஷிகா மற்றும் அருந்ததி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.