ஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் போட்டித் தொடரில் கோப்பை வென்று அசத்தியுள்ளது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி.

ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் சென்றுள்ளது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. மொத்தம் 3 போட்டிகளைக் கொண்ட தொடரில், முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 வெற்றியைப் பதிவு செய்திருந்தன.

இந்நிலையில் கோப்பை கிடைக்க வேண்டுமானால், மூன்றாவது போட்டியில் வெற்றி கிடைக்க வேண்டுமென்ற நிலையில், இரு அணிகளும் களமிறங்கின. டாஸ் வென்ற விண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து ரன்களைக் குவிக்க நினைத்தது. ஆனால், நடந்ததோ வேறு.

ஸ்டஃபானி டெய்லர் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடி, 112 பந்துகளில் 79 ரன்களை எடுத்தார். ஸ்டாஸி ஆன் கிங் 38 ரன்களை எடுத்தார். பிற வீராங்கணைகள் எடுத்த ரன்கள் சொல்லிக்கொள்ளும் ரகத்தைச் சேர்ந்தவை அல்ல.
மொத்தத்தில் 50 ஓவர்கள் விளையாடிய அந்த அணி, டி-20 போட்டிக்கான ரன்களையே எடுத்தது. ரன்களின் எண்ணிக்கை 194.

பின்னர் எளிய இலக்கை விரட்டிய இந்திய அணி, 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 42 ஓவர்களிலேயே ஆட்டத்தை முடித்தது. ரோட்ரிகஸ் மற்றும் மந்தனா ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர்.

இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரை வென்று, கோப்பையையும் கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி.