காத்மண்டு: தெற்காசிய விளையாட்டுப் போட்டியின், பெண்கள் கபடி மற்றும் கால்பந்து பிரிவுகளில் இந்திய அணிகள் தங்கப் பதக்கங்களைத் தட்டிச் சென்றன.

நேபாள நாட்டில் தற்போது 13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பெண்கள் கபடிப் போட்டியின் இறுதியில் இந்திய – நேபாள அணிகள் மோதின. முடிவில், 50-13 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய பெண்கள் அணி வென்ற தங்கப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டது.

பெண்கள் கால்பந்து போட்டியின் இறுதிச் சுற்றிலும் இந்திய – நேபாள அணிகளே மோதின. இதில் ஆட்டத்தின் முதல் பாதி மற்றும் இரண்டாவது பாதியில் இந்திய பெண்கள் அணி தலா 1 கோல் அடித்து, 2-0 என்ற கோல் கணக்கில் தங்கத்தைக் கைப்பற்றியது.

இந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியா இதுவரை 138 தங்கம், 80 வெள்ளி மற்றும் 42 வெண்கலம் என்று மொத்தம் 260 பதக்கங்களைக் குவித்துள்ளது.