டில்லி:

பல கனவுகளோடும், தனது குடும்பத்தின் கவுரமான வாழ்க்கையையும் மனதில் கொண்டு இந்தியர்கள் பலர் வெளிநாடுகளுக்கு சென்று பணியாற்றுகின்றனர். குடும்பம், உறவுகளை பிரிந்து பெரும் மன கவலையுடன் அவர்கள் அங்கு பணியாற்றினாலும், அவர்களின் நிலை தற்போது வரை மோசமாக இருப்பதாகவே கூறப்படுகிறது. இது தொடர்பான ஃப்ரன்ட்லைன் நாளிதழில் ஆர்.கே. ராதாகிருஷ்ணன் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார். அதன் விபரம்…

சவுதி, யுஏஇ, குவைத், கத்தார், ஓமன், மலேசியா, பக்ரைன், ஜோர்டான்ல லெபனான்ல சூடான் போன்ற நாடுகளுக்கு தான் இந்தியர்கள் அதிகளவில் வேலைக்கு செல்கின்றனர்.

கடந்த ஜூன் மாதம் வரை அரபு நாடுகளில் வேலைக்கு செல்ல 1.84 லட்சம் பேர் குடியேற்ற துறையில் தடையில்லா சான்று பெற்றுள்ளனர். மேற்கு ஆசியாவிற்கு கடந்த 2016ம் ஆண்டில் 5.07 லட்சம் பேர் வேலைக்காக சென்றுள்ளனர். 2015ம் ஆண்டில் 7.6 லட்சம் பேர் சென்றனர்.

குடியேற்ற அனுமதி பெற்றவர்கள் மட்டுமே சட்டப்பூர்வ தொழிலாளர்களாக செல்கின்றனர். ஆனால், பலர் சுற்றுலா விசாவில் சென்று 18 நாடுகளில் பணியாற்றுகின்றனர். பெரும்பாலான தொழிலாளர்கள் மோசமான சூழ்நிலையில் பணியாற்றுகின்றனர். பலர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். சிலர் இறந்துள்ளனர். சிலர் தற்போதும் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர்.

கடந்த 3 ஆண்டுகளில் 182 கருணை மனுக்களை உலகம் முழுவதும் இந்தியா சமர்ப்பித்துள்ளது. இதில் ஐக்கிய அரசு எமிரேட்ஸில் 74, ஓமனில் 57 மனுக்குள் அடங்கும். மேற்கு ஆசியாவில் அல்லாத நாடுகளில் 14 மனுக்கள் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2916ம் ஆண்டில் பல நாடுகளில் 3 ஆயிரத்து 927 தொழிலாளர்கள் இறந்துள்ளனர்.

பெரும்பாலான இந்திய தொழிலாளர்கள் மேற்கு ஆசியா நாடுகளில் அதிகம் இறந்துள்ளனர். சவுதி அரேபியாவில் 1,559, யுஏஇ 825, குவைத் 295, ஓமன் 272, கத்தார் 152, பக்ரைன் 107, மலேசியாவில் 170 பேர் இறந்துள்ளனர்.

வீட்டு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், மீனவர்களுக்கான சட்டம் பலவீனமாக உள்ளது. ஒப்பந்ததாரரோ அல்லது உரிமம் பெற்றவரோ தொழிலாளியின் பாஸ்போர்ட்டை வைத்துக் கொள்ளும் நிலை உள்ளது. இதை மாற்ற வேண்டும். அதிக நேர பணிக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது. இதற்கு சட்டப்பூர்வ நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாத நிலை உள்ளது.

அங்கு நீதிமன்றங்களில் அரபு மொழி மட்டுமே வழக்காடு மொழியாக உள்ளது. இதர மொழி பேசும் தொழிலாளர்களுக்கு ஏற்ப ஏதேனும் ஒரு பிராந்திய மொழி வசதி ஏற்படுத்த வேண்டும். இந்திய தொழிலாளர்கள் பணியாற்றும் நாடுகளுடன் இந்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், தொழிலாளர்களின் பிரச்னைகள் எதுவும் கண்டுகொள்ளப்படுவதில்லை. இந்திய தொழிலாளர்கள் தொடர்ந்து துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். அவர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது.