சிட்னி: இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரர்களுடன் ஒப்பிடுகையில், ஆஸ்திரேலியாவின் இளம் கிரிக்கெட் வீரர்கள் முதிர்ச்சியற்றவர்களாயும் வலிமையற்றவர்களாயும் இருக்கின்றனர் என்று விமர்சித்துள்ளார் இந்தியாவின் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பல். இவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்.

இவர், பயிற்சியாளராக செயல்பட்ட காலத்தில் இந்திய அணியை சீர்குலைத்தவர் இந்த கிரேக் சேப்பல் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் கூறியுள்ளதாவது, “இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரர்களோடு ஒப்பிடுகையில், ஆஸ்திரேலியாவின் இளம் வீரர்கள் வலிமையற்று இருக்கின்றனர். அவர்களால், இனிமேல் 16 வயதிற்குட்பட்ட வீரர்களோடுதான் விளையாட முடியும்.

அதேசமயம், எனக்கு இப்படியாக ஒப்பிடவும் அச்சமாக இருக்கிறது. ஏனெனில், ஆஸ்திரேலிய அணியின் வில் புகோவ்ஸ்கியும், கேமரான் கிரீனும் அனுபவ அடிப்படையில் இன்னும் தொடக்க நிலையில்தான் இருக்கிறார்கள்.

சிறந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவதற்கு, பிசிசிஐ அமைப்பு பல கோடிகளை வாரியிறைக்கிறது. ஆனால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் செலவழிக்கும் தொகை, இதனோடு ஒப்பிடுக‍ையில் மிகவும் குறைவே” என்றுள்ளார்.