இந்திய இளைஞர்களிடம் குறைந்துவரும் அமெரிக்க மோகம்..!

புதுடெல்லி: இந்திய இளைஞர்கள் மத்தியில், அமெரிக்க பணி மீதான மோகம் குறைந்து வருவதாக ஆய்வு ஒன்றின்மூலம் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கூறப்பட்டுள்ளதாவது; அமெரிக்காவில் வேலை தேடும் இந்தியர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு ஜூனில் 58% அதிகரித்திருந்த நிலையில், நடப்பு ஆண்டு ஜூனிலோ, 42% அளவுக்கு வீழ்ச்சியை கண்டுள்ளது.

இருப்பினும், வெளிநாடுகளில் வேலை தேடுபவர்களின் முதன்மை தேர்வாக, அமெரிக்காவே இருக்கிறது. இந்த சரிவுக்கு, கொரோனா தொற்றால் ஏற்பட்டிருக்கும் தெளிவற்ற நிலை, அமெரிக்க குடியுரிமை குறித்த விஷயங்களில் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள் ஆகியவை முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

இதே காலகட்டத்தில் கனடா, ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கத்தார் ஆகிய நாடுகள் குறித்த தேடல், இந்தியர்களிடையே அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் வேலை தேடும் 10 இந்தியர்களில், 9 பேர் தொழில்நுட்ப துறையில் வேலை தேடுபவர்களாக இருக்கின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை, அது ஒரு தனித்துவம் வாய்ந்த சந்தையாகும். இங்கு இளம் தொழிலாளர்கள் அதிகம் இருக்கின்றனர். மேலும், உலகின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றவும் தயாராக இருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.