காற்றில் பறந்த மோடியின் வாக்குறுதி – சிக்கலில் இளைஞர்கள்

சண்டிகார்: இந்தியாவில் படித்த இளைஞர்களுக்கான, குறிப்பாக பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகளைப் பெறுவது மிகவும் கடினமான ஒன்றாக மாறிவருகிறது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கடந்த சில ஆண்டுகளாக, வேலை வாய்ப்புகளை பெருக்குவதற்கான எந்த பெரிய நடவடிக்கைகளும், அரசின் சார்பில் எடுக்கப்படவில்லை. எனவே, தங்களுக்கான பொருத்தமான பணி வாய்ப்புகள், நல்ல சம்பளத்தில் கிடைக்குமென நினைத்து வெளிவரும் பட்டதாரிகள், ஏமாந்து போவதே மிச்சம்.

வேறு வழியின்றி, தங்களின் வாழ்க்கைத் தேவைகளை நிறைவுசெய்வதற்காக, கிடைக்கும் சிறிய சிறிய வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.

இந்த வேலையின்மை பிரச்சினையால், பலரால் தங்களுடைய பொறியியல் படிப்பிற்காக வாங்கிய கடன் தொகையை, வங்கிகளில் செலுத்த முடிவதில்லை. 2014 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, பலகோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று மார்தட்டிய மோடி அரசாங்கம் இந்த விஷயத்தில் பெரும் தோல்வியடைந்துவிட்டது என்றே பலரும் வேதனையுடன் குறிப்பிடுகிறார்கள்.

மேலும், இந்த கோபம், வரும் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று நம்பப்படுவதால், மோடிக்கு சிக்கல்தான் என்றும் சொல்லப்படுகிறது.

தகுதியான பணிவாய்ப்புகள் கிடைக்காததற்கு இன்னொரு காரணமாக சொல்லப்படுவது யாதெனில், போதுமான ஆங்கில அறிவின்மை. கிராமப்புற பின்னணியிலிருந்து வரும் மாணவர்கள், இந்தப் பிரச்சினையால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

– மதுரை மாயாண்டி