இந்தியன்-2 பட விபத்து: மயிரிழையில் உயிர் தப்பிய கமல், ஷங்கர் மற்றும் காஜல்…..

சென்னை:

நேற்று இரவு நடைபெற்ற இந்தியன்-2 பட விபத்தில் படத்தின் டைரக்டரான ஷங்கர், நடிகர் கமல்ஹாசன், நாயகி, காஜல் அகர்வால் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக மயிரிழையில்  உயிர் தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்தை நேரில் கண்ட நபர் இந்த தகவலை தெரிவித்து உள்ளார்.

சென்னை பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கத்திலுள்ள ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் இந்தியன்-2 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நேற்று இரவு   சண்டைக்காட்சி ஒன்று படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது, சுமார் 150 உயரமுள்ள  ராட்சத கிரேன் மேலிருந்து சூட்டிங் நடத்தப்பட்டது .எதிர்பாராதவிதமாக கிரேன் சாய்ந்து விழுந்ததில்  உதவி இயக்குனர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனர். வர்களது உடல்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டன.

மேலும் 10 பேர் காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக காவல்துறை யினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மருத்துவமனைக்குச் சென்ற நடிகர் கமல், காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.

இந்த விபத்தில் மரணமடைந்த துணைஇயக்குனர் கிருஷ்ணா பிரபல கார்டூனிஸ்ட் மதன்-ன் மாப்பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், விபத்தை நேரில் கண்ட கமல் மேலாளர்  பரபரப்பு தகவல்களை தெரிவித்து உள்ளார். கிரேன் சரிந்து விழுவதை கண்டதும் அவர் எழுப்பிய  எச்சரிக்கை குரல் காரணமாக, படப்பிடிப்பு தளத்தில் இருந்து டைரக்டர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன், நடிகை காஜல் அகர்வால் உள்பட சிலர்   அதிர்ஷ்டவசமாக மயிரிழையில் உயிர் தப்பினர் என்று கூறி உள்ளார்.

இதற்கிடையில் படப்பிடிப்பு தளத்தில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை என்றும் இணை இயக்குனர் பரத்குமார் சார்பில் லைகா நிறுவனம் புகார் செய்யப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக கிரேன் ஆப்ரேட்டர் ராஜன் மீது விபத்து ஏற்படுத்துதல், அஜாக்கிரதையாக செயல்பட்டது, உயிரிழப்பு ஏற்படும் வகையில் விபத்து ஏற்படுத்துதல் ( 388, 287, 304 (a)) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ஆப்பரேட்டரை  தேடிவருகின்றனர்.

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

You may have missed