டில்லி

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்  கொரோனாத் தொற்றிலிருந்து  குணமடைய ஆயுர்வேதா மற்றும் ஹோமியோபதி மருத்துவமே காரணம் என தற்போது தெரியவந்துள்ளது.

 

இது குறித்து  ‘ஆயுஷ்’அமைச்சர் ஸ்ரீபத் நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இளவரசர் சார்லஸ் கொரோனாவிலிருந்து நலமுடன் குணமடைய ஆயுர்வேதமும்  ஹோமியோபதி மருத்துவமுமே முதன்மைக் காரணம் எனக் கூறியுள்ளார்.

கொரோனாவிற்கு எதிராக இந்த இரண்டு தொன்மையான மருத்துவ முறைகள் மிகச் சிறப்பாக செயல்படுவதை சுட்டிக்காட்டிய அமைச்சர்,  இளவரசருக்கு சிகிச்சை அளித்தவர் பெங்களூரில் உள்ள ‘சௌக்யா’  எனும் ஆயுர்வேத மருத்துவமனையில் மருத்துவர்.

அந்த ஆயுர்வேத மருத்துவரே தொலைபேசியில் தன்னை தொடர்பு கொண்டு,  COVID-19 தொற்றுடன் இருந்த  இளவரசருக்கு தனது ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி இணைந்த முறையில் சிகிச்சை அளித்து குணம் பெற வைத்ததை தன்னிடம் தெரிவித்ததாக அமைச்சர் கூறினார்.

சார்லசுக்கு லேசான கொரோனா அறிகுறிகள்  கண்டுபிடிக்கப்பட்டவுடன்  அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார். மறுபுறம் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது முற்றிலும் குணம் அடைந்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் நம் தொன்மையான மருத்துவ முறைகளின் சிறப்பிற்கு இந்நிகழ்வு ஒரு சான்றாகும்.

3000 ஆண்டுப் பழமையான  ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி உள்ளிட்ட நம் மரபு மருத்துவங்கள் கொரோனாவிற்கு மிக சிறந்த தடுப்பு முறைகள் ஆகும்.  இது குறித்து நாம் இனி ஆய்வுகள் வழியே நுட்பமான முறைகளை கண்டறிய வேண்டும். 

சீனாவிலும் கொரோனாத் தொற்றிற்கு  மரபார்ந்த சீன மருத்துவமும்,  மேற்கத்திய மருத்துவமும் இணைந்த முறையே அதிகம் பயனளித்துள்ளது.

நம் முன்னோரின் சிகிச்சை முறைகளை உலகின் பிற நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன என அமைச்சர் தெரிவித்தார்…