இந்தியாவில் அனைவரும் வந்தேறிகள்தான்

நெட்டிசன்:

Vijay Pallava   அவர்களின் முகநூல் பதிவு:

இன்றைய ஆங்கில இந்து நாளேடில் ஒரு முக்கிய ஆய்வுக் கட்டுரை வெளிவந்துள்ளது.

( How Genetics is settling the Aryan Migration Debate..by Tony Joseph)

இந்த ஆய்வுக்கட்டுரையில் சொல்லப்படும் விடயங்கள், சங்பரிவார், ஆர்.எஸ்.எஸ்க்கு உவப்பான விடயம் இல்லை. தயானந்த சரஸ்வதி, திலகர், கோவல்கர், சாவர்க்கர் போன்றவர்கள் தங்களுடைய அரசியல் ஆதாயத்திற்கு புராணத்தையும், இதிகாசத்தையும் வேதத்தையும் துணைக்கு அழைத்து ஆரியர்கள் என்பவர்கள் இந்தியா என்ற புண்ணிய பூமியில் தோன்றியவர்கள் என்ற கருத்தை முன்வைத்தார்கள்.

இந்தக் கருத்தை செழுமைப்படுத்தி பித்ரு பூமி, மண்ணின் மைந்தர்கள் என வளர்த்து தேசபக்திக்கு முக்கியத்துவம் அளித்தார்கள். இந்தோ-ஐரோப்பிய மொழிகள் வட இந்தியாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியது என்ற பிழையான வாதத்தை முன்வைத்தார்கள். மகாபாரத போர் நடந்த வருடம் கி.மு 3139 என அபத்தமாகவும் பரப்பினார்கள்.

இதெயெல்லாம் தவிடு பொடியாக்கி மரபணு சோதனை மூலம் நடந்த ஆய்வு அறிக்கை வெளிவந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன், Huddersfield பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் மார்ட்டின் ரிச்சர்ட்ஸ் தலைமையில் 16 விஞ்ஞானிகள் “ A Genetic Chronology for the Indian Subcontinent” என்ற ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளார்கள். அதாவது Bronze Age காலக்கட்டத்தில் மத்திய ஆசியாவிலிருந்து ஒரு இனக்குழு இந்தியாவுக்கு புலம் பெயர்ந்துள்ளது. மத்திய ஆசிய மக்களுக்கும் , இந்திய மக்களுக்கும் இடையே உள்ள Z93 என்ற மரபணு ஒற்றுமையை இந்த ஆய்வு அறிக்கை சுட்டுகிறது.

Z93 என்ற மரபணு இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் மக்களிடம் இருப்பதையும் ஆய்வு பூர்வமாக நிறுவியுள்ளார்கள். இந்த புலம் பெயர்தல் ஏறாத்தாழ 4000-5000 வருடங்களூக்கு முன் நடந்துள்ளது. இதே காலக்கட்டதில்தான், சிந்து சமவெளி நாகரிகத்தின் வீழ்ச்சியும் நடந்துள்ளது என்பதையும் ஒப்பிட்டு பார்க்கவேண்டும்.

ஹார்வார்ட் பல்கலைகழக பேராசிரியர் டேவிட் ரியிச்சின் மற்றொரு ஆய்வு, ANI என்ற Ancestral North Indians மரபணு மத்திய ஆசியா மக்களோடு ஒத்துபோவதை சுட்டிக்காட்டி, ASI என்ற Ancestral South Indians ஐ வரையறுக்கும்போது ’தனித்துவமானது’ எனக் குறிப்பிடுகிறார். Z93 மரபணு இந்திய மக்கள் தொகையில் 17.5% சதவீதம் இருப்பதாகவும், எஞ்சி இருக்கும் மக்கள் இன்னும் பல பகுதியிலிருந்து இந்தியாவுக்குள் புலம் பெயர்ந்திருக்கிறார்கள் என இந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது. அதாவது 60,000 வருடங்களூக்கு முன் ஆப்பிரிக்காவிலிருந்தும், 10,000 வருடங்களுக்கு முன் மேற்காசியாவிலிருந்தும், மற்றும் ஆஸ்திரிலியா, கிழக்கு ஆசியாவிலிருந்து இந்தியாவுக்குள் புலம் பெயர்ந்துள்ளார்கள்.

ஆக, இந்திய மக்கள் சுயம்புவாக இந்த புண்ணிய பூமியில் தோன்றவில்லை என நிரூபணமாகியுள்ளது. பல்வேறு நிலப்பரப்பிலிருந்து இந்தியாவுக்குள் புலம் பெயர்ந்தவர்கள். பலவகை கலாச்சார, பூகோளப் பரப்பு பின்புலத்தில், பண்பாட்டு கலவையோடு இந்தியாவுக்குள் குடியமர்ந்துள்ளார்கள். ஆக இந்திய மக்கள் அனைவருமே புலம் பெயர்ந்தவர்கள் என்கிறார் கட்டுரை ஆசிரியர் டோனி ஜோசப்.