இந்திய – மாலத்தீவு பிரச்னை : வேலை வாய்ப்பை இழக்கும் இந்தியர்கள்

மாலே

ந்தியா மற்றும் மாலத்தீவுக்கு இடையே சுமுகமான உறவு இல்லாததால் பல இந்தியர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.

மாலத்தீவில் பல இந்தியர்கள் பணி புரிந்து வருகின்றனர்.    பல நிறுவனங்களிலும், மருத்துவமனைகளிலும், வங்கிகளிலும் இந்தியர்கள் முக்கிய பொறுப்புக்களை வகித்து வருகின்றனர்.   கடந்த பிப்ரவரி மாதம் மாலத்தீவு அதிபர் யாமீன் அப்துல்லா அவசர நிலை பிரகடனம் செய்தார்.   அதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதனால் மாலத்தீவு அரசு இந்தியர்களை அங்கு பணிபுரிய அனுமதிப்பதை நிறுத்திக் கொண்டுள்ளது.    மாலத்தீவில் இருந்து வரும் பல வேலை வாய்ப்பு விளம்பரங்களில் “இந்தியர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்” எனக் குறிப்பிடப் படுகிறது.   அது மட்டும் இன்றி ஏற்கனவே பணி புரியும் இந்தியர்களின் பணி உரிமங்களும் சிறிது சிறிதாக ரத்து செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு பணி உரிமம் ரத்து செய்யப்பட்டவர்களில் ஒருவரான ஜாகோப், “நான் இங்கு ஒரு மருத்துவமனையில் பணி புரிந்து வந்தேன்.  எனது 4 வயது மகன் மற்றும் கர்ப்பமான மனைவியைக் காண விடுமுறையில் இந்தியா வந்தேன்.   ஆனால் எனது பணி உரிமம் திடீரென ரத்து செய்யப்பட்டு விட்டது.   என் குடும்பமே என்னை நம்பி உள்ளது.   இது குறித்து நான் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு தகவல் அனுப்பி உள்ளேன்.  அவர் தலையிட்டு ஏதாவது செய்வார் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

இது போல மாலத்தீவில் பணி புரியும் பலர் விடுமுறையில் வந்த போது மீண்டும் பணிக்கு திரும்ப அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.    அவர்கள் இந்திய அரசுக்கு புகார் அளித்துள்ளனர்.   கடந்த 2015 ஆம் வருடத்தில் இருந்தே இந்தியா மற்றும் மாலத் தீவுகளுக்கிடைய சுமுக உறவு இல்லை எனக் கூறும் அரசு அதிகாரிகள் மோடி அப்போது தனது மாலத்தீவு பயணத்தை ரத்து செய்ததை சுட்டிக் காட்டி உள்ளனர்.    இது குறித்து டில்லியில் உள்ள மாலத்தீவு தூதரகம் ஏதும் பதிலளிக்க மறுத்து விட்டது.