டில்லி

சீனாவின் வுகான் நகரில் இருந்து வந்துள்ள இந்தியர்கள் நலமாக உள்ளதாக மத்திய அரசின் சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக அந்நாட்டில் பயண தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்த வைரஸ் முதலில் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்டது. அங்குள்ள இந்தியர்கள் வெளியில் செல்ல முடியாமல், உணவின்றி மிகவும் துயருற்றனர்.

இந்திய அரசு அவர்களை  ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் மூலம் அழைத்து வரத் தொடங்கி உள்ளது.   நேற்று சென்ற முதல் விமானத்தில் இந்தியாவைச் சேர்ந்த 324 பேர் கொண்டு வரப்பட்டுள்ளனர். இன்று அவர்கள் டில்லி விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்துள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் இது குறித்து, “சீனாவின் வுகான் நகரில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் 324 பேர் டில்லி விமான நிலையம் வந்துள்ளனர்.   அவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர். அவர்களிடம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு அதன் பிரகு முகாம்களுக்கு  அனுப்பப்படுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.