அமெரிக்காவில் இந்தியர்கள் கிரீன் கார்டு பெற 150 ஆண்டுகள் ஆகும்

வாஷிங்டன்:

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறும் வகையில் கிரீன் கார்டு வழங்கும் திட்டம் அமலில் உள்ளது. கிரீன் கார்டு பெறுவதற்கான விதிமுறைகளை டிரம்ப் அரசு கடுமையாக்கியுள்ளது. அதோடு கிரீன் கார்டு வழங்குவதற்கு ஒவ்வொரு நாட்டிற்கும் 7 சதவீதம் என்ற அளவீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கிரீன் கார்டு பெறுவதற்கு நீண்ட காலமாகும்.

 

2017ம் ஆண்டில் வழங்கப்பட்ட கிரீன் கார்டு எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிட்டால் அமெரி க்காவின் குடியேற்றம் மற்றும் குடியுரிமை துறை வெளியிட்டுள்ள காத்திருப்பு பட்டியலில் உள்ள இந்தியர்கள் இதை பெற 150 ஆண்டுகள் வரை ஆகும் என்று வாஷிங்டன் சார்ந்த திங்க் டேங்க் கட்டோ இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 20ம் வரையிலான கணக்கீடுபடி இந்தியாவில் இருந்து குடிபெயர்ந்தவர்கள், அவரது வாழ்க்கை துணைகள், குழந்தைகள் என மொத்மத் 6 லட்சத்து 32 ஆயிரத்து 219 பேர் கிரீன் கார்டு பெற விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.

உயர் திறன் கொண்ட தொழிலாளர்கள் பிரிவில் அதாவது இபி1 குடியேற்ற தகுதி கொண்டவர்கள் கிரீன் கார்டு பெறுவதற்கான காத்திருப்பு பட்டியல் மட்டுமே குறைவாக உள்ளது. தற்போதைய நிலவரப்பட்டி இப்பட்டியலில் உள்ளவர்கள் கிரீன் கார்டு பெற 6 ஆண்டுகள் ஆகும்.இந்த பட்டியலில் 34,824 இந்தியர்கள் உள்ளனர். இதில் 48 ஆயிரத்து 754 வாழ்க்கை துணைகள் மற்றும் குழந்தைகள் அடங்கியுள்ளனர். மொத்தம் 83,578 இந்தியர்கள் இந்த காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.

இளநிலை பட்டதாரிகளுக்கான இபி3 குடியேற்ற தகுதி அடிப்படையில் கிரீன் கார்டு பெறுவதற்கு தற்போதைய காத்திருப்பு பட்டியலின் அடிப்படையில் 17 ஆண்டுகள் ஆகும். கடந்த ஏப்ரல் 20ம் தேதி வரை 54,892 இந்தியர்கள் காத்திருக்கின்றனர். 60,381 வாழ்க்கை துணைகள் மற்றும் குழந்தைகள் என இந்த பட்டியலில் மொத்தம் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 273 பேர் காத்திருக்கின்றனர்.

உயர் பட்டதாரிகளுக்கான இபி 2 குடியேற்ற தகுதி கொண்டவர்களின் பட்டியல் தான் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. இந்த பட்டியலில் இருப்பவர்களுக்கு கிரீன் கார்டு வழங்க 151 ஆண்டுகள் ஆகும். கிரீன் கார்டு பெறுவதற்கான சட்டத்தை திருத்தவில்லை என்றால் இவர்களில் பலர் இறந்துவிடுவார்கள். அல்லது அமெரிக்காவை விட்டு வெளியேறிவிடுவார்கள். இந்த பட்டியலில் வாழ்க்கை துணைகள் மற்றும் குழந்தைகள் என மொத்தம் 4 லட்சத்து 33 ஆயிரத்து 368 பேர் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.