புதுடெல்லி: அமெரிக்காவில் குடியேற ஆசைப்பட்டு, மெக்சிகோ வழியாக சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள் 311 பேர் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு, மீண்டும் இந்தியாவிற்கே திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

அமெரிக்காவில் டிரம்ப் பதவிக்கு வந்த பிறகு, சட்டவிரோத குடியேறிகள், குறிப்பாக, மெக்சிகோ வழியாக ஊடுருவுவோர் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 311 பேர், சர்வதேச புரோக்கர்களின் உதவியுடன் அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோ நாட்டிற்குச் சென்று, அந்நாட்டின் வழியாக அமெரிக்காவிற்குள் நுழைய முயன்றனர்.

ஆனால், அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, அவர்களிடம் இருந்த ரூ.25 லட்சத்திற்கும் மேலான ரொக்கப்பணம் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முடிவில், அவர்களை மீண்டும் இந்தியாவிற்கே நாடு கடத்த முடிவு செய்யப்பட்டது.

இவர்களுக்கு அவசரகால ஒருவழி பயண அனுமதிச் சீட்டு கொடுக்கப்பட்டு, ஸ்பெயின் வழியாக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். அவர்கள் வரும் விமானம் அக்டோபர் 18ம் தேதி டெல்லியை அடையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 311 இந்தியர்களில் பெரும்பான்மையோர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அம்மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர் ஏற்கனவே அமெரிக்காவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.