புதுடெல்லி :

போராடிப்பெற்ற சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் வெறுப்புணர்வைத் தூண்டும் போலிச் செய்திகளால் குழி தோண்டிப் புதைக்க நினைக்கும் பேஸ்புக்கின் நடவடிக்கை குறித்து அனைத்து இந்தியர்களும் கேள்வி கேட்க வேண்டும் என்று ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய சமூக வலைத்தளங்கள் பாஜக கட்டுப்பாட்டில் உள்ளதாக தனது ட்விட்டரில் நேற்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்து பேஸ்புக் நிறுவனம் சார்பில் வெளியான அறிக்கையில், இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனவும், வெறுப்புணர்வை தூண்டும், ஒற்றுமையைச் சீர்குலைக்கும் பதிவுகள் அனைத்தும் யார்பதிந்தாலும் நீக்கப்படுவதாகவும் கூறியிருந்தது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், பேஸ்புக் இந்திய நிறுவனம் பாஜக-வுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜு க்கர்பேர்க்-க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில்,

“பேஸ்புக் நிறுவனத்தின் இந்தியத் தலைமை மற்றும் குழு, பாஜக-வுக்கு ஆதரவாக செயல்படுகிறது, வெறுப்புணர்வைத் தூண்டும் விதமாக பாஜக பதியும் பதிவுகளை நீங்குவதில்லை என்றும், இது கடந்த 6 ஆண்டுகளாக நீடித்துவருவதாகவும் குற்றம் சாட்டினார்.

சம்பந்தப்பட்டவர்கள் மீது நியாயமான கால அவகாசத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.